PUBLISHED ON : செப் 08, 2025

கிராமங்களில் விளையாடப்படும் விளையாட்டு இது.
இருவர் விளையாடலாம்.
ஒருவருக்கு, பக்கத்தில் இருப்பவர்கள் ஐடியா கொடுக்கலாம்.
விளையாடும் விதம்:
ஒரு வண்ணத்தில் மூன்று பொத்தான்கள் எடுத்துக்கொள்ளுங்கள். மஞ்சள் என்று வையுங்களேன்...
இவை புலிகள்.
வேறு வண்ணத்தில் 15 பொத்தான்கள் எடுங்கள். நீலமாகவோ கறுப்பாகவோ இருக்கலாம். இவை ஆடுகள்.
கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் முதலில் மூன்று புலிகளை வைக்க வேண்டும். சிவப்பில் காட்டப்பட்டிருக்கும் சந்திப்பு இடங்களில் எங்கே வேண்டுமானாலும் வைக்கலாம்.
பிறகு, ஆடுகளை ஒவ்வொன்றாகக் கட்டத்தில் வைக்க வேண்டும்.
இப்போது புலி ஆடுகளை வெட்டத் தொடங்கும். எப்படி வெட்டும்? புலி ஓர் இடத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதன் அடுத்த சிவப்புச் சந்திப்பில் ஆடு இருந்து, அதற்கும் அடுத்த சிவப்புச் சந்திப்பு காலியாக இருந்தால், அந்தப் புலி, ஆட்டைத் தாண்டி அடுத்த சிவப்புச் சந்திப்புக்குப் போகும். இடையில் இருந்த அந்த ஆடு வெட்டுப்பட்டதாகப் பொருள். அந்த ஆட்டை (பொத்தானை) வெளியே எடுத்துவிட வேண்டும்.
தனக்கு அடுத்து காலியான சிவப்புப் புள்ளி இல்லாத இடமாகப் பார்த்துப் பார்த்து ஆடுகள் வைக்கப்பட வேண்டும்.
எல்லா ஆடுகளையும் வெட்டிவிட்டால் புலி ஆட்டக்காரர் ஜெயித்தார்.
புலி தான் இருக்கும் இடத்தில் இருந்து பக்கத்தில் உள்ள காலியான சிவப்புச் சந்திப்புக்குத்தான் நகரும். அல்லது தனக்கு அருகில் இருக்கும் சிவப்புச் சந்திப்பில் ஆடு இருந்து அடுத்த சந்திப்பு காலியாக இருந்தால் அந்த ஆட்டை வெட்டும். இரண்டும் இல்லாமல், அடுத்தடுத்த இரு சந்திப்புகளிலும் ஆடுகள் இருந்தால் புலியால் நகர முடியாது.
அப்படி புலி மாட்டிக்கொண்டால், ஆட்டு ஆட்டக்காரருக்கே வெற்றி.