
இந்தியா - ஆஸ்திரேலியா மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20.9.2025 அன்று டில்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 412 ரன்களைக் குவித்தது. இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், அதன் துணை கேப்டன், 50 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார். 63 பந்துகளில் 125 ரன்கள் குவித்தார்.
இதனால், ஐம்பது ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில், குறைந்த பந்துகளில் அதிவேகமாகச் சதம் எடுத்த இந்திய கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றார். இந்திய அளவில் ஆடவர், மகளிர் இருபாலர் கிரிக்கெட் விளையாட்டிலும், இந்தத் துணை கேப்டனின் சாதனைதான் முதலாவதாக உள்ளது. இவருக்கு முன்பாக குறைந்த பந்துகளில் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருந்தார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013இல் ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில், 52 பந்துகளில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது.
பெண்கள் கிரிக்கெட் உலகில், இந்திய வீராங்கனையின் சாதனை இரண்டாவது இடத்தை வகிக்கிறது. முதல் இடம் ஆஸ்திரேலியாவின் மெக் லெனிங், கடந்த 2012ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக 45 பந்துகளில் சதம் அடித்ததே, இன்று வரை சாதனையாக இருந்து வருகிறது.
குறைந்த பந்துகளில், அதிக வேகமாக சதம் எடுத்து, கோலியைப் பின்னுக்குத் தள்ளிய, இந்த இந்திய வீராங்கனையின் பெயர் என்ன?
விடை: ஸ்மிருதி மந்தனா