PUBLISHED ON : ஜூன் 22, 2026

உணவகங்களுக்குச் சென்றால், ஒரு பெரிய தட்டில் சோறு, சிறிய கிண்ணங்களில் குழம்பு, ரசம், பொரியல், தயிர் என அடுக்கி வைப்பார்கள். இதே போன்று உணவு பரிமாறும் முறை, பதினாறாம் நூற்றாண்டிலும் இருந்துள்ளது. விஜயநகரப் பேரரசின் தலைநகரான ஹம்பியில் இதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன.
கரும்பச்சை நிறப் பாறைகளில் வட்ட வடிவமான தட்டுகள், தட்டுகளின் இருபக்கமும் குட்டிக் குட்டிக் கிண்ணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாழை இலை வடிவிலான தட்டும் உள்ளது.
நீர் செல்வதற்கு ஒரு சிறிய கால்வாய், அந்தக் கால்வாயின் இருபுறமும் உணவருந்தும் இந்தக் கல் தட்டுகள் செதுக்கப்பட்டுள்ளன. தட்டுகள் சில இந்தக் காலத்து பாக்கு மட்டைத் தட்டுகளை நினைவூட்டுகின்றன. இத்தகைய அமைப்பு இருக்கும் இடம், 'போஜன சாலா' என்று அழைக்கப்படுகிறது.
கிருஷ்ணதேவராயர் அரண்மனை இருக்கும் வளாகத்தின் அருகில்,
இந்த போஜன சாலை உள்ளது. இது படை வீரர்களுக்கு உணவருந்தப் பயன்பட்டிருக்கலாம் அல்லது காவல் புரியும் வீரர்களுக்கு, திறந்தவெளி உணவகமாகச் செயல்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் குறிப்புகள் கூறுகின்றன.
உணவருந்தும் வீரர்களுக்குத் தேவையான நீரை, இந்த நீர்க் கால்வாய் பூர்த்தி செய்திருக்கலாம்.
கைகளைக் கழுவுவதற்கும் தட்டுகளைத் தூய்மைப்படுத்துவதற்கும் இந்த நீர்க் கால்வாயே போதுமானதாக இருந்திருக்கலாம்.
பொ.யு. 1540ஆம் ஆண்டு அச்சுததேவராயரின் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட ஒரு கல்வெட்டு, ரகுநாத கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலக்கொடையைப் பற்றிக் குறிப்பிடுகிறது. அதில், முட்டலாபூர் கிராமத்து ஏரியை நோக்கி இருந்த லகுமையா, ஹோம்னையா, மல்லையா ஆகியோரின் நிலங்கள், உணவருந்தும் கால்வாய் அருகே இருந்ததாகக் கூறுகிறது.
1980களின் தொடக்கத்தில் ஹம்பியின் அரண்மனை வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போதுதான், இந்தக் கால்வாய் அமைப்பு கண்டறியப்பட்டது.
இது போன்ற உணவுக்கான நீர்க் கால்வாய் அமைப்பு, புஷ்கரணி குளம் உள்ள இடத்திலும், ராணிகளின் குளியலறை உள்ள பகுதியிலும் இருப்பதாக அங்குள்ள தொல்லியல் வழிகாட்டிகள் கூறுகின்றனர்.
