தேசத்தின் கதைகள்: எழுபது மாடக் கோயில்கள் எழுப்பிய மன்னர்
தேசத்தின் கதைகள்: எழுபது மாடக் கோயில்கள் எழுப்பிய மன்னர்
PUBLISHED ON : ஜூன் 15, 2026

நாவல் மரத்தின் கீழே சிவலிங்கம் ஒன்று இருந்தது. அதற்கு யானை ஒன்று, தினமும் நீர் எடுத்து வந்து, அபிஷேகம் செய்தது. இதனால் அந்தத் தலத்திற்கு, 'திருஆனைக்கா' என்ற பெயர் வந்தது. அதுவே பின்னர் திருவானைக்காவல் என்றானது. அந்த நாவல் மரத்தில் வசித்த சிலந்தி, இறைவனின் மீது, மரத்தின் சருகுகள் விழாமல் இருக்க, தன் நூலினால் பந்தல் அமைத்தது.
மறுநாள் வந்த யானை, அந்தச் சிலந்தி வலையை நீக்கி, தண்ணீர் தெளித்து பூஜை செய்தது. சிலந்தி மறுபடியும் வலை பின்னியது. இதே கதை தொடர்ந்து நடைபெற்றது.
ஒரு நாள் கோபமுற்ற சிலந்தி, அந்த யானையின் துதிக்கையில் நுழைந்து கடித்தது. வலியால் யானை துதிக்கையை அடிக்க, யானையும் சிலந்தியும் இறந்தன.
அந்தச் சிலந்திதான், மறுபிறவியில் சோழ அரசனாகப் பிறந்தார் என்று தொன்மக் கதை கூறுகிறது. பிறக்கும் போது குழந்தையின் கண்கள் சிவந்து இருந்ததால், செங்கணான் என்று பெயர் பெற்றார். அரசர் என்பதால், கோச்செங்கணான் என்று அழைக்கப்பட்டார். அந்த மன்னர் கட்டிய கோயில்தான் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்.
முற்பிறவியின் நினைவாக அரசர், தான் எழுப்பி கோயில்கள் அனைத்தையும், யானைகள் ஏற முடியாத மாடக் கோயில்களாக அமைத்ததாகக் கூறப்படுகிறது. 'எண்டோளீசற்கு எழில் மாடம் எழுபது செய்துலகம் ஆண்டான்' என்கிறது, பெரியாழ்வார் திருமொழி. மன்னர் எழுபது மாடக் கோயில்களைக் கட்டினார் என்கிறது பாடல்.
'சிலந்தியும் ஆனைக் ...
...திருநிழற் பந்தர் செய்து'
என்னும் தேவராப் பாடலில் செங்கணான் பிறப்பின் வரலாற்றைக் கூறுகிறார் திருநாவுக்கரசர்.
செங்கணானுக்கும் சேரன் கணைக்காலிரும் பொறைக்கும் போர் நடந்தது. போரில் கணைக்காலிரும்பொறை தோற்றதால், குடவாயில் எனப்படும் கும்பகோணம் சிறையில் அடைக்கப்பட்டார்.
அப்போது பொய்கையார் என்னும் புலவர், செங்கணான் மேல் 'களவழி நாற்பது' என்னும் நூலை இயற்றினார். பரிசாகக் கணைக்கால் இரும்பொறையை விடுவிக்க வேண்டினார் புலவர். ஆனால் அதற்குள் இரும்பொறை இறந்துவிட்டார்.
வரலாற்றில் இரண்டு செங்கணான்கள் இருந்திருக்கலாம் என்கின்றனர் அறிஞர்கள்.
செங்கணானின் காலம், பொ.யு. இரண்டு முதல் ஐந்தாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.
