PUBLISHED ON : நவ 10, 2025

கொடுக்கப்பட்டிருக்கும் திருக்குறள்களையும் அவற்றிற்கான விளக்கத்தையும் படியுங்கள். அவற்றில் ஓர் ஒற்றுமை மறைந்திருக்கிறது. அது என்ன என்று கண்டுபிடியுங்கள்.
1. கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்
ஒருவர் நம்மைக் கொன்றாற் போன்ற தீமையைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மையைப் பெரிதாக எண்ண வேண்டும்.
2. மனந்தூய்மை செய்வினைத் தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்
ஒரு நபர் நல்லொழுக்கமுடையவர்களுடன் சேர்ந்தால், அவருடைய மனமும் செயலும் தூய்மையடையும்.
3. அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி அமையாத மூன்று
தூது செல்பவருக்கு அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்லும் சொல்வன்மை ஆகிய மூன்று பண்புகளும் மிக அவசியம்.
4. நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு
நகை, ஈகை, இன்சொல், இகழாமை ஆகிய நான்கும், வாய்மையான நற்குடியில் பிறந்தவர்களின் பண்புகள்.
5.அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண்
அன்பு, நாணம், நடுநிலை, இரக்கம், வாய்மை ஆகிய ஐந்து குணங்களும் சான்றாண்மையைத் தாங்கி நிற்கும் தூண்கள்.
விடைகள்:
குறட்பாக்களில் ஒன்றிலிருந்து, ஐந்து வரையிலான எண்கள் இடம்பெற்றுள்ளன. இது போல், ஆறு முதல் பத்து வரையிலான எண்களும், நூறு, ஆயிரம், கோடி உள்ளிட்ட எண்களும் குறட்பாக்களில் உள்ளன.

