PUBLISHED ON : நவ 03, 2025

நிக்கோபார் (அந்தமான்) என்ற பெயர் ஆங்கிலேயர் காலத்தில் வந்தது. அதற்கு முன் அந்தத் தீவுக் கூட்டத்திற்கு வேறொரு நல்ல தமிழ்ப் பெயர் இருந்தது. அது காரணப் பெயராகவும் அமைந்து இருந்தது. ஆடையின்றி, ஆடையற்ற என்னும் பொருளில் அந்தப் பெயர் அமைந்து இருந்தது. அந்தத் தீவின் மனிதர்கள், பழங்காலத்தில் ஆடையின்றி வசித்தக் காரணத்தினால், அந்தப் பெயர் வந்தது. மணிமேகலையில் வரும் 'நக்க சாரணர்' இந்த ஊர் மக்கள் தான்.
மணிமேகலை பாத்திரமான சாதுகன் (ஆதிரையின் கணவன். இந்த ஆதிரையிடம்தான் மணிமேகலை, அட்சயப் பாத்திரம் கிடைத்ததும், முதன் முதலில் பிச்சை கேட்கிறாள்) என்னும் வணிகன், வணிகம் செய்ய கடலில் தன் குழுவினருடன் சென்றபோது, கப்பல் உடைந்து இந்தத் தீவில் கரையொதுங்கினான். தீவின் மனிதர்கள் நரமாமிசம் உண்பவர்கள். ஆதலால் சாதுகனை உண்பதற்காகத் தங்கள் கூட்டத்தின் தலைவனிடம் கொண்டு செல்கிறார்கள்.
பலமொழிகள் தெரிந்த சாதுகன், அந்தக் கூடத்தினரின் மொழி பேச, உயிர் தப்பிக்கிறான். புத்தமதக் கருத்துகளைச் சாதுகன் போதிக்க, அந்தக் கூட்டம் நரமாமிசம் உண்பதை விட்டொழிக்கின்றனர். பின்னர் பூம்புகாருக்குச் செல்லும் கப்பலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டான் சாதுகன், என்கிறது மணிமேகலை காப்பியம்.
தமிழ் இலக்கியத்துடன் தொடர்புடைய நிக்கோபார் தீவுகளுக்கு, தமிழ்ப் பெயர் என்ன?
விடைகள்: நக்காவரம் (அம்மணம் என்று பொருள்).

