சரித்திர சங்கமம்: வரலாற்றில் புதைந்த வர்த்தகக் கோட்டை
சரித்திர சங்கமம்: வரலாற்றில் புதைந்த வர்த்தகக் கோட்டை
PUBLISHED ON : செப் 22, 2025

மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரிக்குச் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில், அமைந்துள்ளது இந்தக் கோட்டை.
15 ஏக்கர் பரப்பளவில் செங்கல், சுண்ணாம்புக் கலவையால் கட்டப்பட்டக் கோட்டை, 12 கண்காணிப்பு மாடங்களைக் கொண்டிருந்தது.
1700 களில் மொகலாயர்களால் இந்தக் கோட்டை கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. 1735இல் ஆற்காடு நவாப் தோஸ்த் அலி கான் ஆளுகைக்கு இது உட்பட்டிருந்தது.
மொகலாயர், நவாப்களின் ஆட்சிக் காலத்தில், ஒரு முக்கியமான வர்த்தகத் துறைமுகமாகச் செயல்பட்டுள்ளது. 100 மீட்டர் நீளமுள்ள படகுத்துறை, கடலுக்குள் நீண்டு, சரக்குகளை ஏற்றுமதி-இறக்குமதி செய்ய பயன்படுத்தப்பட்டது.
இந்தக் கோட்டை வழியாக ஜரிகை துணிகள், உப்பு, நெய் போன்ற பொருட்கள் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கோட்டையின் பெயரில் வராகன், காசுகள் அச்சடிக்கப்பட்டன. அதற்காக ஒரு நாணயச் சாலையும் இருந்துள்ளது. இந்தத் தகவலை புதுச்சேரி அனந்த ரங்கம் பிள்ளை எழுதிய 1736ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நாட்குறிப்பும் உறுதி செய்கிறது.
பொ.யு. 1750-இல், பிரெஞ்சு தளபதி டியூப்ளேக்கு கோட்டை பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
பின்னர் நடந்த கர்நாடகப் போர்களின் விளைவாக, பிரெஞ்சுப் படை ஆங்கிலேயரிடம் தோல்வியுற்றது.
பொ.யு. 1760-இல் கோட்டையைக் கைப்பற்றிய ஆங்கிலேயப் படை, பிரெஞ்சு எதிர்ப்பின் காரணமாக அதன் பல பகுதிகளை இடித்து அழித்தது.
சங்க இலக்கியமான சிறுபாணாற்றுப்படை, கோட்டை அமைந்துள்ளப் பகுதியை, 'இடைக்கழிநாடு' என்று குறிப்பிடுகிறது.
இங்கே இரும்பு, ஈயம், செம்புப் பொருட்கள், டெரகோட்டா விளக்கு, வளையல் துண்டுகள், இரும்பு ஆணி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்துள்ளன. கோட்டை, தமிழக அரசின் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது.
'ஆலம்பர்வா', 'ஆலம்புரவி' என்றெல்லாம் ஆவணங்களில் குறிப்பிடப்படும் இந்தக் கோட்டையின் தற்போதைய பெயர் என்ன?
விடைகள்: ஆலம்பரைக் கோட்டை