
இன்றைய காலத்தில் சில மாணவர்கள் தேர்விற்கு பயந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்படி தேர்வை எதிர்கொள்ளவே தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வார்கள். தேர்வில் தோல்வி அடைந்து விட்டால், வாழ்க்கையே அஸ்தமனமாகிவிட்டது என்று கருதுவதே இதற்கு காரணம்.
தாமஸ் ஆல்வா எடிசன் அமெரிக்காவை சேர்ந்த கண்டுபிடிப்பாளர்.
ரப்பர் மரத்தை தவிர வேறு தாவரம் எதிலாவது ரப்பர் கிடைக்குமா, என்று 50,000 தாவர வகைகளை பரிசோதித்து பார்த்தார் இவர். ஆனால் எதிலும் அவர் நினைத்தது நடக்கவில்லை.
அப்போது அவரது நண்பர், ''மிஸ்டர் எடிசன். தங்களுடைய முயற்சிகளுக்கு பலன் இல்லாமல் போய்விட்டதே'' என வருத்தப்பட்டார்.
அதற்கு அவர், ''ஏன் பலன் இல்லை. நான் பரிசோதனை செய்த தாவரங்களில் இருந்து ரப்பர் கிடைக்காது என்பதை கண்டுபிடித்துவிட்டேனே. இது போதாதா'' என சிரித்தார்.
மாணவச் செல்வங்களே... இதைப் படித்தீர்களா. தாமஸ் ஆல்வா எடிசன் தன்மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார். தோல்விகளை எப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பாக கருதினார் என்பதை கவனியுங்கள். ஒரு தேர்வில் தோல்வி அடைந்தால், அதற்கு என்ன காரணம் என்று அலசுங்கள். அடுத்து வரும் தேர்வில் 'நல்ல மதிப்பெண்கள் வாங்குவேன்' என சபதம் எடுங்கள். உங்களின் கனவு ஒருநாள் பலிக்கும்.