ADDED : மே 15, 2025 08:29 AM

அமெரிக்கா வளர்ந்த நாடாக இருப்பதற்கு வளம் மட்டும் காரணமல்ல. சாலைப் போக்குவரத்து பலமாக அமைந்ததும் முக்கிய காரணம். குறிப்பாக 18 சக்கரங்களைக் கொண்ட டிரக்கின் பயன்பாடு அங்கு அதிகம். மூலப்பொருள், விவசாய விளை பொருட்கள், இயந்திரங்கள், உற்பத்தியாகும் பலவகை பொருட்களை ஓரிடத்தில் இருந்து நெடுந்துாரத்தில் உள்ள இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல டிரக்குகளே அங்கு பயன்படுகின்றன.
பல மணி நேரம், பல நாட்களுக்கு இடைவிடாமல் டிரக் ஓட்டுபவர்கள் அங்கு அதிகம். நாடெங்கும் 25 லட்சத்திற்கும் அதிகமான டிரக்குகள் பயன்பாட்டில் உள்ளன. சார்லஸ் என்ற அனுபவம் மிக்க டிரக் டிரைவர் ஒருவர் நியூயார்க்கில் இருந்தார். அமெரிக்காவின் மூலை முடுக்கெல்லாம் பயணித்தவர் அவர். அவரிடம் இளைஞன் ஒருவன் டிரக் ஓட்டும் பயிற்சிக்கு வந்தான். டிரைவிங் முடித்து அதற்கான தேர்வில் தேறி இருந்தான். ஆனால் சாலையில் ஓட்டிப் பழக்கமில்லை.
தொழிலின் நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொடுத்தார். நியூயார்க் நகரை விட்டு வெளியே வந்ததும் இளைஞனை ஓட்டச் சொன்னார். வழிகாட்டியபடி ஐந்து மணி நேரம் ஓட்டி களைப்பு அடைந்தான். '' எனக்கு பசிக்கிறது. சாப்பிட்டு ஓய்வு எடுக்கலாமா?'' எனக் கேட்டான். இருவரும் சாலையோர ஓட்டலில் மதிய உணவு சாப்பிட்டனர். அதன் பின் சார்லஸ் ஓட்ட ஆரம்பித்தார்.
10 மணி நேரம் கடந்தும் அவர் சோர்வாக வில்லை. திகைப்புடன், 'எப்படி இவ்வளவு நேரம் ஓட்டுறீங்க?'' என்றான். ''அதுக்கு முன்னால நான் கேட்குறதுக்கு பதில் சொல்லு... காலையில கிளம்புறப்போ என்ன செஞ்சே?''
''மனைவியை முத்தமிட்டு வேலைக்குப் போறேன்... பைன்னு சொல்லிட்டு வந்தேன்''
''அதுதான் பிரச்னை''
''என்ன பிரச்னை?''
''நானும் காலையில கிளம்பும்போது மனைவியை முத்தமிட்டேன். ஆனால் வேலைக்குப் போறேன்னு சொல்லலை. ஊரை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வர்றேன்னு சொன்னேன். நீயும் இனி மேல் என்னைப் போல சுத்திப் பார்க்க போவதாக நினை. சோர்வு ஏற்படாது'' எனச் சிரித்தார்.