இந்தியர் ஒருவர் அலுவலக வேலையாக ஜப்பான் சென்றார். அவரது நிறுவனத்தில் வாடகை கார் ஏற்பாடு செய்திருந்தனர். முதல் நாள் அன்று 15 நிமிடத்திற்கு முன்பாகவே கார் டிரைவர் வந்தார். 2வது நாள் 10 நிமிடம் தாமதமாக வந்தார். ஆனால் அதற்காக மன்னிப்பு கேட்டார்.
''கவலை இல்லை... சரியான நேரத்திற்கு முன்னதாகவே உங்களை வரச் சொல்லி இருந்தேன். அதனால் தாமதமாக வந்தாலும் பாதிப்பு இல்லை'' என்றார் இந்தியர். ''அப்படியானால் இன்னும் எனக்கு ஐந்து நிமிடம் அவகாசம் தருவீர்களா'' எனக் கேட்டார் டிரைவர்.
''அதனால் என்ன... தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றார் இந்தியர். செல்லும் வழியில் ஓரிடத்தில் காரை விட்டு இறங்கிப் போனார். சொன்னபடி ஐந்தே நிமிடத்தில் திரும்பி வந்த டிரைவர், '' நான் வேலை செய்யும் அலுவலகம் இது தான். இன்று தாமதமாக வந்ததற்காக அலுவலக விதிப்படி அரை நாள் லீவுக்கு கடிதம் கொடுத்து விட்டு வருகிறேன்'' என்றார்.
அதைக் கேட்ட இந்தியர், 'நண்பரே... தாமதமாக வந்ததால் எந்த நஷ்டமும் இல்லை. என்னைத் தவிர இது யாருக்கும் தெரியவும் செய்யாது. அரைநாளை வீணாக இழந்திருக்க வேண்டாமே' என்றார்.
' அதுதான் எனக்கும் தெரியுமே' என பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டிரைவர். நேர்மைக்கு இந்த ஜப்பானியர் முன்னுதாரணம் என்றால் மிகையில்லை.

