/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
கப்பலில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் காந்திஜி
/
கப்பலில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் காந்திஜி
ADDED : டிச 27, 2013 02:14 PM

1931ல் மகாத்மா காந்தி வட்டமேஜை மாநாட்டிற்காக லண்டன் சென்று, கப்பலில் திரும்பிக் கொண்டிருந்தார். மும்பையை நோக்கி கப்பல் வந்து கொண்டிருந்தது. பயணிகளுக்கு கிறிஸ்துமஸ் விழாவை கப்பலிலேயே கொண்டாட வேண்டிய நிலை இருந்தது.
கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், புராட்டஸ்டென்டுகளும் கப்பலில் இருந்தனர். காலை ஆராதனையை யார் நடத்துவது என்பதில் பிரச்னை ஏற்பட்டது. அவர்கள் மகாத்மா காந்தியிடம் வந்து, ''எங்கள் ஆராதனையில் நீங்களும் கலந்து கொண்டு பேச வேண்டும்,'' என கேட்டுக் கொண்டனர். காந்திஜி அவர்களிடம், ''காலை எத்தனை மணிக்கு ஆராதனை நடத்துவீர்கள்?'' என்று கேட்டார்.
அவர்கள், ''உங்கள் வசதிப்படி நடத்திக் கொள்ளலாம்,'' என்றனர்.
காந்திஜி சிரித்தபடியே, ''என்னுடைய பிரார்த்தனை நேரம் அதிகாலை 4மணி. அப்போது ஆராதனையை நடத்தி விடலாமா?'' என்று கேட்டார்.
''ஐயையோ! அந்த நேரத்தில் எல்லாரும் வர மாட்டார்களே!'' என்றனர் கிறிஸ்தவர்கள்.
உடனே காந்திஜி, ''தூங்க விரும்புபவர்கள் தாராளமாக தூங்கட்டும். எத்தனைபேர் வருகிறார்களோ, அவர்களைக் கொண்டு ஆராதனையை நடத்தி விடலாம். அப்போதே நானும் பேசி விடுகிறேன்,'' என்றார்.
மறுநாள் காலை 4 மணிக்கு கப்பலின் மேல்தளத்தில் ஏராளமானோர் கூடி விட்டனர். எல்லாருமே எழுந்து வந்தது காந்திஜிக்கு மகிழ்ச்சியைத் தந்தது. காந்திஜி அவர்களிடையே பேசினார்.
''இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்காகப் பிறந்தார். அவரது பிறந்தநாளை, ஒருவிழாவாக மட்டும் கருதி விடக் கூடாது. நமது வாழ்க்கையை, அன்றாடம் ஒளி வீசச் செய்யும் நிலையான சம்பவிப்பு என்று மனதில் கொள்ள வேண்டும். பூசல்களைத் தள்ளி வைத்து விட்டு, ஒருவர் மேல் மற்றவர் அன்பு செலுத்தினால் தான், கிறிஸ்தவ மதத்தை உண்மையாகப் பின்பற்றியதாக ஆகும்,'' என்றார். அவரது சொற்பொழிவைக் கேட்ட அத்தனை பேரும் நெஞ்சம் நெகிழ்ந்தனர்.