ADDED : ஏப் 07, 2015 10:24 AM

இரண்டாம் உலகப்போரின் போது, லண்டன் நகர மக்கள், குண்டுமழைக்கு பயந்து பதுங்கு குழிகளில் தங்கியிருந்தனர். குழந்தைகள் தேவாலயங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆனால், அவர்களது பெற்றோரில் பலர் குண்டுக்கு இரையாகி விட்டனர். அனாதைகளான அந்தக் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு ஆலய பங்குத்தந்தைக்கு ஏற்பட்டது. அவர் தனக்குத் தெரிந்த பணக்காரர்களை அழைத்து, குழந்தைகளை தத்தெடுத்துக் கொள்ளச் சொன்னார். அன்றைய பொருளாதார சூழலில் குழந்தைகளைத் தத்தெடுக்கவே பலரும் தயங்கினர். ஒருவழியாய் பாடுபட்டு அவர்களைத் தத்துக் கொடுத்தார். மூன்று குழந்தைகள் மிஞ்சினர்.
அவர்களில் இருவரை தானே வளர்ப்பதென முடிவு செய்தார்.
அந்தளவுக்குத் தான் அவரது பொருளாதார நிலை இடம் கொடுத்தது. இன்னும் ஒரு குழந்தையை மட்டும் யாரும் தத்தெடுக்க மறுத்தனர். ஏனெனில், அது ஒரு கருப்பு நீக்ரோ குழந்தை. அவலட்சணமாக இருந்தது. தனக்குத் தெரிந்த ஒரு அம்மையாரிடம் அந்த குழந்தையை தத்தெடுக்கச் சொன்னார். அவர் ஏற்கனவே இரண்டு மூன்று குழந்தைகளைப் பராமரித்து வந்தார்.
இந்தச் சூழலில், இன்னொரு குழந்தையை எடுக்கத் தன்னால் இயலாது என பங்குத்தந்தையிடம் சொன்னார். பங்குத்தந்தை சிரமப்பட்டு அவரைச் சம்மதிக்க வைத்தார். அம்மையாரும் அழைத்துச் சென்று விட்டார். வீட்டுக்குச் சென்று அழுக்கடைந்த அந்த குழந்தையின் உடையை மாற்ற அவிழ்த்தார்.
அதிலிருந்த பையில் இருந்து ஒரு காகிதம் விழுந்தது. அத்துடன் ஆயிரம் டாலருக்கு ஒரு செக் இணைக்கப்பட்டிருந்தது. ''அன்புள்ளம் கொண்டவரே! எங்கள் குழந்தையை யார் வளர்க்கிறார்களோ அவர்கள் சிரமப்படக் கூடாது என்ற நோக்கத்தில் எங்களிடமிருந்த ஆயிரம் டாலரையும் காசோலையாக இணைத்துள்ளோம். எங்கள் குழந்தையை நல்லபடியாக வளர்க்க கர்த்தர் உங்களுக்கு ஆசிர்வாதம் செய்வாராக!'' என எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெண் மகிழ்ந்தார். கர்த்தருக்கு நன்றி சொன்னார்.
இந்தக் குழந்தையின் கதையைப் போலவே, இயேசுவின் நிலையும் அமைந்திருந்தது. எத்தனையோ பேருக்கு வீடு கட்டும்பணியில் மரவேலை செய்த ஜோசப்பின் மகனான அவருக்கு மாட்டுத்தொழுவமே கிடைத்தது. எத்தனையோ பேருக்கு கட்டில் செய்து கொடுத்த ஜோசப்பின் மனைவி மேரி படுத்திருந்ததோ வைக்கோல் படுக்கையில்.
இதுபோன்ற குழந்தைகள் இன்று நம் நாட்டிலும் இருக்கிறார்கள். அவர்களில் பலர் தெருவில் பிச்சையெடுத்து திரிகிறார்கள்.
அவர்களை அப்படியே விட்டுவிட்டால் உணவுக்காக சமூக விரோதிகளாகி விடுவார்கள். அவர்களைத் தத்தெடுத்து நல்வழி காட்டும் பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.