ADDED : மே 05, 2015 03:59 PM

வட அமெரிக்காவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள கரீபியன் தீவுகளில் ஒன்று ஜமைக்கா. 1970ல் 'மார்ஜீனா' என்ற போதைச் செடியை பயிரிட்டதாக இங்கிருந்த விவசாயிகளைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் பெண்களும் அடங்குவர். சிறைக்காவலர்கள் கைதிகளிடம் கடுமையாக நடந்தனர். பெண்களைப் பாடச் சொல்லி வற்புறுத்தினர். அவர்கள் பைபிளிலுள்ள சங்கீதம் 137, சங்கீதம் 19:14 வசனங்களை பாடலாகப் பாடினர். உலகில் அதிகம் விற்று சாதனை படைத்த 'போனியம்' என்னும் ஆல்பத்தில் உள்ள 'பை த ரிவர்ஸ் ஆப் பாபிலோன்' என்ற பாடல் தான் அது. பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்வார், கி.மு. 586ல் ஜெருசலேம் நகரை முற்றுகையிட்டான். அங்கிருந்த யூதர்களில் சிலர் மட்டும் தப்பித்து, ஏதாமியரின் நாட்டுக்குச் சென்றனர். ஏனென்றால் யூதர்களும், ஏதாமியர்களும் சகோதரர்கள். ஈசாக்கின் மூத்த மகனான ஏசாயின் பிள்ளைகளே ஏதாமியர்கள். ஈசாக்கின் இரண்டாவது மகனான யாக்கோபின் பிள்ளைகளே யூதர்கள். ஆனால், தஞ்சம் புகுந்த யூதர்களை ஏதாமியர்கள் நேபுகாத்நேச்வாரிடம் காட்டிக் கொடுத்தனர். ஆண்களையும், பெண்களையும் கொடூரமாகக் கொன்றனர். குழந்தைகளின் கால்களைப் பிடித்து பாறைகளில் மோதச் செய்து மகிழ்ந்தனர். எதிரியான நேபுகாத்நேச்வாராலும், துரோகிகளான ஏதாமியர்களாலும் துன்பப்பட்ட யூதர்கள் கடவுளிடம் வேண்டிய ஜெபத்தின் ஒரு பகுதி தான் சங்கீதம் 137.எதிரிகளையும், துரோகிகளையும் நம்மால் என்ன செய்ய முடியும் என திகைக்கிறீர்களா? அவர்களின் துரோகத்தால் துன்பப்படுகிறீர்களா? கவலைப்படாதீர்கள். ''என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே! என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமூகத்தில் பிரீதியாயிருப்பதாக'' என்ற சங்கீதம் 19;14 வசனத்தை வாசித்து, அவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள். அதாவது, ஆண்டவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைத்து அவரையே சரணடைந்து விடுங்கள். கடவுள் அந்த துரோகிகளைக் கவனித்துக் கொள்வார்.