ADDED : ஜன 28, 2011 11:06 AM

ஒரு இடத்தில் தரப்படும் செய்தியை, மற்றொரு இடத்தில் அச்சு வடிவில் தரும் 'டெலிபிரிண்டர்' என்னும் கருவியைக் கண்டுபிடித்தார் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன். இந்தக் கருவியைத் தயாரிக்கும் உரிமையை ஒரு நிறுவனம் அவரிடம் கேட்டது. அதற்கான தொகை குறித்து பேசப்பட்டது. அதுபற்றி யோசித்து சொல்வதாகச் சொல்லி விட்டார் எடிசன். அவரது மனைவி, ''நீங்கள் 20 ஆயிரம் டாலருக்கு குறையாமல் பெற்றால் தான், உங்கள் அரிய உழைப்புக்குரிய பலன் கிடைக்கும்,'' என்றார். சில நாட்கள் கடந்து, அந்தக் கம்பெனி மீண்டும் எடிசனுக்கு அழைப்பு விடுத்தது. எதிர்பார்க்கும் தொகையைக் கேட்டது. 'இருபதாயிரம் டாலர் என்பது மிக அதிகத் தொகையாக இருக்கிறதே!' என்று யோசித்தபடியே, எடிசன் எதுவும் கேட்காமல் அமைதியாக இருந்தார். இதைக் கவனித்த கம்பெனி நிர்வாகி 'எடிசன் மிக அதிகமான தொகையை எதிர்பார்த்து கேட்க தயங்குகிறார் போலும்' என்று நினைத்து, ''மிஸ்டர் எடிசன், நாங்கள் லட்சம் டாலர் தர எண்ணியுள்ளோம், உங்களுக்கு சம்மதமா?'' என்றார். இருபதாயிரம் டாலரே அதிகம் என எண்ணியஇவருக்கு லட்சம் டாலர் கிடைக்கிறதென்றால்... எடிசன் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளானார்.'அமைதி' ...இது ஒரு அருமையான வார்த்தை. அமைதியாய் இருக்கும் சுபாவம் உள்ளவர்கள் மிகவும் பேறு பெற்றவர்கள். இவர்களிடம் இயற்கையாகவே மனோசக்தி அதிகம். வீடோ, பணியிடமோ... பிரச்னைகள் உருவானால் அமைதி காத்தாலே போதும். அதற்குரிய பலன் கைமேல் கிடைக்கும். ''அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டாம்,'' என்கிறார் அவ்வையார். ''அமைதியாக இருப்பவர்களை அறிவில்லாதவர்கள் என எண்ணி அவர்களை வென்று விடலாம் என்று நினைக்காதீர்கள்,'' என்பது இதன் பொருள். எடிசனைப் போல பேரதிர்ஷ்டம் எல்லாருக்கும் அமையுமெனக் கூறிவிட முடியாது. ஆனால், அமைதி காப்பவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவது உறுதி.
