ADDED : அக் 21, 2012 05:45 PM

ஒரு வீட்டில் கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சமாதானப்படுத்தும் எல்லையைத் தாண்டி, பிரச்னை பெரிதாகி விட்டது. சபை போதகருக்கு இந்த விஷயம் தெரிவிக்கப்பட்டது. அவர் பிரச்னையை முடித்து வைக்க எண்ணி, இருவரையும் சபைக்கு வரச்சொன்னார். இருவரிடமும் பாசத்துடன் விசாரித்தார்.
கணவன் அவரிடம், ''பாஸ்டர், கடந்த வாரம் தான் நான் அவளுக்கு கார் வாங்கிக் கொடுத்தேன். சமீபத்தில் புதிய வீடு கட்டி, அதில் குடியேற வைத்தேன். சில நாட்கள் முன்னதாக விலை உயர்ந்த புடவைகள் வாங்கித் தந்தேன்,'' என்று தான் மனைவிக்கு செய்ததையெல்லாம் பட்டியல் போட்டார். 'இவளுக்கு நான் என்ன குறை வைத்தேன் என்று நீங்களே விசாரியுங்கள்,'' என்றார்.
அந்தப்பெண்மணி இதில் எதையும் மறுக்கவில்லை. ''ஐயா! இவர் வாங்கித்தந்த எதுவும் எனக்கு தேவையில்லை. நான் குடிசையில் குடியிருக்கக்கூட தயாராக இருக்கிறேன். செல்ல வேண்டிய இடத்திற்கு பஸ்சில் போய்க் கொள்கிறேன். விலை உயர்ந்த புடவைகள் எனக்கு வேண்டாம். நூல் புடவைகளே போதும். உயர்ந்த பொருட்களை எனக்கு தந்ததாக பட்டியலிடும் இவர், தன்னை எனக்கும் என் குடும்பத்துக்கும் தராமல், எந்நேரமும் குடியிலும், சிற்றின்ப கேளிக்கைகளிலும் ஈடுபடுகிறாரே! என் மனம் என்ன பாடுபடும்?'' என்று கேட்டு அழுதாள். இப்போது பாஸ்டருக்கு பிரச்னை விளங்கிவிட்டது.
'நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, தமது மணவாட்டியாகிய சபையை போஷித்துக் காப்பாற்றுகிறார் என்பது உண்மை தான். அதே சமயத்தில் தமது மணவாட்டியை தமக்கு முன்பாக மகிமையுள்ளதாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்' என்று பைபிளில் வசனம் வருகிறது.
இயேசு எப்படி தன்னை சபைக்காக ஒப்படைத்து உயிரையும் கொடுத்தாரோ, அதுபோல் மனைவியானவளுக்கு கணவன் அன்பை முதலில் வழங்க வேண்டும். அன்பான குடும்பத்தில், அணிகலன்களுக்கும், ஆடைகளுக்கும் இடமில்லை.
மனைவிக்கு வாங்கித்தரும் பொருளை விட, அவள் மீது செலுத்தும் பாசமே உயர்ந்தது.
பைபின் பொன்மொழி
* உம்மிடத்தில் கேட்கிற எவருக்கும் கொடுங்கள். உம்முடையதை எடுத்துக் கொள்கிறவனிடத்தில் அதைத் திரும்பிக் கேளாதீர்கள்.
* செல்வத்திடம் வைக்கும் பேராசை தீமை அனைத்திற்கும் வேர்.
* சிறு விஷயத்தில் தவறாக நடப்பவன் பெரிய விஷயத்திலும் தவறாகவே நடப்பான்.