/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
நல்லா பேசுங்க! நல்லதையே பேசுங்க!
/
நல்லா பேசுங்க! நல்லதையே பேசுங்க!
ADDED : ஜன 20, 2015 04:09 PM

ஒரு பெண் எங்கு சென்றாலும், யாரிடம் பேசினாலும் யாரையாவது குறை சொல்லிக் கொண்டே இருப்பாள். அவளால் பல குடும்பங்களில் பிரிவினை, பிரச்னை உண்டானது. ஒருநாள் சபை போதகர் அவளை அழைத்து, சந்தைக்குப் போய் முழு கோழியை வாங்கி, வரும் வழியில் அதன் இறகுகளை உருவி கீழே போட்டுக் கொண்டே வரும்படி சொன்னார். அவளும் அப்படியே செய்தாள்.
மீண்டும் போதகர் அவளிடம், வந்த வழியே திரும்பிச் சென்று இறகுகளை எடுத்து வரும்படி கூறினார். அவளோ, ''ஐயா! எல்லாம் காற்றில் பறந்து போயிருக்குமே! எப்படி எடுக்க முடியும்?'' என்றாள்.
உடனே போதகர், ''இப்போது புரிகிறதா? நீ பேசுகிற வார்த்தைகளும் இதைப் போலத் தான்! மறுபடியும் பெற முடியாது. அவை
காட்டுத்தீயைப் போல பரவி, சம்பந்தப்பட்டவர்களிடம் பிரச்னையை உண்டாக்குகிறது. அதை மீண்டும் சரி செய்ய உன்னால் முடியாது'' என்று அறிவுரை சொல்லி அனுப்பினார்.
என் அன்பானவர்களே! நாக்கு பட்டயத்தைப் போல கூர்மையானது(சங்.64:3), சர்ப்பத்தைப் போல விஷமுள்ளது(சங்.140:3) வஞ்சனையாகப் பேசும்(சங் 5:9), புறங்கூறும்(சங்.15:3), ஏமாற்றும்(சங்.50:19), காயப்படுத்தும் (சங்.31:20), சபிக்கும்(ஒசி.7:16), அழிக்கும்(சங்.52:2), பொய் பேசும்(சங்.109:2). இப்படிப்பட்ட நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது. எல்லா விலங்குகளையும் அடக்குகிறார்கள். ஆனால், தன் நாவை அடக்க முடியவில்லை. இரட்சிப்பு மட்டுமே அவனுடைய நாவின் பேச்சு வழக்குகளைக் கட்டுப்படுத்துகிறது (2 கொரி.5:17-18)
இன்றைய காலகட்டத்தில் அனேகர் தன்னுடைய நாவின் மூலமாகவே பிரச்னைகளில் அகப்பட்டு, துன்பத்தைச் சந்திக்கின்றனர். சிறிய உறுப்பாகிய இந்த நாக்கு, பெரிய உறவுகளையே பாதிக்க வைக்கும் ஆற்றல் உடையது. நாவைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் தேவனாகிய கர்த்தர் ஒருவருக்கே உள்ளது. அவரிடம் நம்மை முழுமையாக ஒப்புக் கொடுக்கும் போது நல்லதை மட்டும் பேச வேண்டும் என்பதை நமக்கு போதிப்பார். எப்படி பேச வேண்டும் என்று ஆலோசனை தருவார். நம் பாதம் கல்லில் இடறாத படி அவர் நம்மை வழிநடத்துவார். நம் வாயோடு வாயாய் அவர் பேசி சமாதானத்தையும், அற்புதங்களையும் நிகழ்த்துவார்.