
சிறுமியான எஸ்தர் தன் அம்மாவுடன் ஆலயத்திற்கு செல்வது வழக்கம். ஒருநாள் அப்படி செல்லும் போது எஸ்தருக்கு ஒரு சந்தேகம் வந்தது.
''அம்மா. நாம் ஆலயத்திற்கு வருகிறோம். ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறோம். ஆனால் நான் அவரை பார்த்ததே இல்லை. அவர் எப்படி இருப்பார்'' என்று கேள்வி கேட்டாள்.
அவரோ, 'சிறு குழந்தைக்கு நாம் எப்படி இதை புரியவைப்பது' என சிறிது நேரம் யோசித்தார்.
''செல்லம். நீதான் தினமும் அவரை பார்த்துக்கிட்டேத்தானே இருக்க..'' என்றாள் அம்மா.
''என்னம்மா விளையாடுகிறாயா. நாமோ வாரத்தில் ஒருநாள்தானே வருகிறோம்'' என கேட்டாள்.
''நீ தினமும் பள்ளிக்கு செல்கிறாய். அங்கு ஆசிரியர்கள், நண்பர்கள் என அனைவரும் உன் மீது அன்பாக உள்ளனர். இப்படி நம்மீது அன்பு வைத்திருப்போர் அனைவரும் அவரின் வடிவம்தான்'' என்றார்.
அப்போது காற்று வீசியது. வண்ணத்துப்பூச்சி ஒன்று எஸ்தரின் கைகளை வருடிச் சென்றது.
''அப்படின்னா நான் இவ்வளவு நேரம் ஆண்டவர்கிட்டத்தானே பேசிக்கிட்டு இருக்கேன்'' என்று சிரித்தாள்.

