
டேனியல் ஹிரோக்கர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பஸ்தர். அவர் அமெரிக்காவின் வெர்ஜீனியாவில் உள்ள தானியக் காப்பகம் ஒன்றில் மேலாளராகப் பணி புரிந்தார். மனைவியும் இரு குழந்தைகளும் இருந்தனர். வெளித்தோற்றத்திற்கு அவர் நல்லவராக இருந்தாலும், அவரது அந்தரங்க வாழ்வில் இருண்ட ரகசியம் ஒன்றிருந்தது. அவர் போதை வஸ்துக்களுக்கு அடிமையானவர் மட்டுமல்ல, 19 வயதுள்ள டிரேசி என்ற இளம்பெண்ணையும் கொலை செய்து உடலை மறைத்து விட்டார்.
இது வெளியுலகுக்கு தெரியாததால், அவர் சார்ந்திருந்த கிறிஸ்தவ சபையில் அனைவரும் மதிக்கத்தக்கவராக இருந்தார். சபை தொடர்பான பணிகளில் உற்சாகமாக பங்கேற்றார். இந்த சூழ்நிலையில் சிறைச்சாலையில் உள்ளவர்களுக்கு நற்செய்தி அளிக்கும் பணி
அவருக்குத் தரப்பட்டது. ஒரு கட்டத்தில் அவர் ஆண்டவரிடம் ஜெபம் செய்து போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற்றார். அதேநேரம் டிரேசியை கொலை செய்து மறைத்தது, அவரது மனதை அழுத்திக் கொண்டேயிருந்தது.
ஒருநாள் சிறைக் கைதிகளுக்கு நற்செய்தி அளித்தார். அவரிடம் கைதிகள், 'நாங்கள் செய்த குற்றத்திற்காக தண்டனையை அனுபவிக்கிறோம். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?'' என்றனர். இந்த வார்த்தைகள் டேனியலின் மனதைப் பாதித்தது. தன் குற்றத்தை மறைத்து, சிறைக்கைதிகளுக்கு நற்செய்தி அறிவிப்பது அவரது மனதில் நெருடலை ஏற்படுத்தியது. இது பற்றி அவர் தன்னுடைய மனைவியிடம் மனம் விட்டுப் பேசினார். இனிமேலும் தன் குற்றத்தை மறைத்து தண்டனையில் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பது சரியில்லை என்பதை உணர்ந்தார். தன் சிறு வயது மகன்களான ஐசக், அனபெஸ் ஆகியோரிடம், நீதியின் முன் சரணடையப் போவதாகத் தெரிவித்தார். குழந்தைகள் அழுதார்கள். தங்களைப் பிரிய வேண்டாம் என்றார்கள்.
ஆனாலும் டேனியல் நீதிபதி முன் சரணடைந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனப்பூர்வமாக தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவரது நற்பண்புக்காக பரிவு காட்டி இரண்டாண்டு சிறைத் தண்டனை விதித்தது. தண்டனைக்குப் பின் வெளியே வந்த அவருக்கு சபை முன்பாகவும், சமுதாயத்தின் முன்பாகவும் மதிப்பும் மரியாதையும் பெருகியது. இது தான் நேர்மையின் இலக்கணம். இந்த நேர்மையையே தேவனுடைய பிள்ளைகள் என்று அழைக்கப்படுகிற நம்மிடத்தில் ஆண்டவர் எதிர்பார்க்கிறார். நாமும் டேனியல் ஹிரோக்கரைப் போல நம் தவறுகளை ஒப்புக் கொள்வோம். நேர்மையுடன் வாழப் பழகுவோம்.
''நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனசாட்சியை உடையவனாய் இருக்க பிரயாசப்படுகிறேன்'' (அப்.24:16) என்கிற பைபிள் வசனத்தை பின்பற்றுவோம்.