ADDED : ஜன 07, 2022 07:20 PM

இத்தாலியை சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் கடல் மார்க்கமாகவே சென்று அமெரிக்க உட்பட பல நாடுகளை கண்டுபிடித்தார். இதற்காக இவருக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் இவர் மீது பொறாமை கொண்ட சிலர் இருந்தனர்.
அவர்களில் ஒருவன், ''நீங்கள் மட்டுமல்ல. வேறு யார் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திருந்தாலும், பல புதிய நாடுகளை கண்டுபிடித்திருப்பார்கள்'' என்றான்.
உடனே கொலம்பஸ் மேஜையின் மீது இருந்த கோழி முட்டையை எடுத்து, ''இதைச் செங்குத்தாக இந்த மேஜையின் மேல் நிறுத்தி வை பார்க்கலாம்'' என சவால் விட்டார்.
அவனும் பல முயற்சிகளை செய்து பார்த்தான். அவனால் முட்டையை நிற்க வைக்க முடியவில்லை.
''உங்களால் நிறுத்த முடியுமா'' எனக்கேட்டான்.
அவரும் முட்டையை வாங்கி அதன் குறுகலான பகுதியை மேஜையின் மீது லேசாக தட்டினார். முட்டையில் சிறிது பள்ளம் விழ, அதை மேஜையின் மீது நிறுத்தினார்.
''இப்படிச் செய்வது என்றால் நானும் செய்திருப்பேனே'' என்றான்.
கொலம்பஸ் புன்னகைத்தவாறு, ''எந்தக் காரியத்தையும் ஒருவர் செய்து காட்டிய பிறகு அது சுலபமாகத்தான் தோன்றும். அதை முதல் முறையாகச் செய்வதற்குத்தான் மூளை வேண்டும். இதுவே முட்டை சொல்லும் தத்துவம்'' என்றார்.
அதைக்கேட்டு அவமானத்தால் தலைகுனிந்தான் பொறாமைக்காரன்.