
ஆபத்தான காலத்தில் உயிர்த்தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும் என பைபிள் கூறுகிறது. ஒரு குடும்பத்தினர் அழகான நாயை வளர்த்தனர். ஒருநாள் அதிகாலையில் அந்த நாய் இறந்து கிடந்தது.
அதற்காக அந்தக் குடும்பத்தினர் மிகவும் வருந்தினர். சற்று தொலைவில் ஒரு கருநாகம் இறந்து கிடப்பதையும் அவர்கள் கண்டார்கள்.
நடந்தது இதுதான். அந்த பாம்பு வீட்டினுள் நுழைய முயன்றது. அதை நாய் தடுத்தது. நாகத்திற்கு கோபம் வந்தது. அது சீறி எழுந்து நாயை பலமுறை கொத்தியது.
என்றாலும், நாய் பாம்பை உள்ளே விடவில்லை. இறுதியில் அது நாகத்தின் கழுத்தை கடித்து குதறியது.
விஷம் ஏறி இறந்து கிடந்த அந்த நாயின் அன்பை நினைத்து அந்தக் குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர். இதைப்போலவே பாவத்தின் கொடிய விஷத்திலிருந்து மக்களை மீட்க இயேசுநாதர் தனது ரத்தத்தை சிந்தி உயிரைத் தியாகம் செய்தார்.
''நமக்கு சமாதானத்தை உண்டு பண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்,'' என்கிறது பைபிள்.