ADDED : ஆக 10, 2014 05:57 PM

ஒவ்வொரு செயலையும் கர்த்தர் நன்மைக்காகவே நடத்துகிறார். நம் கண்களுக்கு தீமையாய் தெரியும் செயல்கள் கூட நன்மைக்காகவே நடத்தப்படுகின்றன.
பிரவுன், ஒரு கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தான். அவன் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது புயல்வீசியது. கப்பல் அலைக்கழிக்கப்பட்டு பாறைகளில் முட்டி மோதி சிதைந்தது. பிரவுனைத் தவிர கப்பலில் இருந்த எல்லாரும் பலியாகி விட்டனர்.
அவன் தப்பிப் பிழைத்து, ஒரு தீவில் கரையேறினான்.
சுற்றுமுற்றும் மனித நடமாட்டமே இல்லை. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக கர்த்தருக்கு நன்றி சொன்னான். அங்கிருந்து தாய்நாட்டுக்குச் செல்ல வழிசெய்யும்படி மனதார பிரார்த்தித்தான்.
பசி போக்க அந்த தீவில் கிடைத்த கனி காய்களை சாப்பிட்டான். தங்குவதற்காக ஒரு வாரம் சிரமப்பட்டு, குடிசையும் அமைத்துக் கொண்டான்.
இப்படியே காலம் சென்றதே தவிர கப்பல் ஏதும் அந்தப்பக்கமாக வரவில்லை. இருந்தாலும், கர்த்தரிடம் விசுவாசமாக ஜெபிப்பதை மட்டும் அவன் கைவிடவில்லை.
ஒருநாள் அவன் காட்டுக்குள் சென்று விட்டு திரும்பும்போது, அவனது குடிசை எரிந்து கொண்டிருந்தது. கஷ்டப்பட்டு கட்டிய குடிசை எரிந்ததில் அவனுக்கு மிகவும் வருத்தம். கண்ணீர் முட்டியது. ''இது கடும் குளிர்காலம். வெளியே படுக்கவே முடியாது. புதிய குடிசை அமைக்க இன்னும் ஒருவாரம் ஆகுமே! என்ன செய்வேன்?'' என புலம்பினான்.
வேறு வழியின்றி, ஒரு மரத்தில் தங்கிக் கொள்ளலாம் என எண்ணி அதில் ஏறினான். உச்சிக்குச் சென்றதும்
கடலில் ஒளி தெரிந்ததைப் பார்த்தான். ஒரு கப்பல் வந்து கொண்டிருந்தது.
கடற்கரையில் ஏதோ தீ தெரிவதைக் கண்ட அக்கப்பலின் கேப்டன் கப்பலை கரைக்கு செலுத்தினார்.
பிரவுன் மரத்தில்இருந்து இறங்கி கப்பலை நோக்கி ஓடினான்.
கப்பலின் கேப்டன் பிரவுனிடம், ''இங்கே தீப்பற்றி எரிந்தது என் பார்வையில் பட்டது. யாரோ உதவி கேட்கிறார்கள் என எண்ணி கப்பலை இங்கு திருப்பினேன்,'' என்றார்.
குடிசை மட்டும் எரியாமல் இருந்திருந்தால் கப்பல் கரைக்கு வந்திருக்குமா? கடவுள் கஷ்டங்களைக் கொடுப்பது தற்காலிகமாகத்தான். நிரந்தர சுகம் அந்தக் கஷ்டங்களின் பின்னால் ஒளிந்திருக்கிறது என்பது பிரவுனின் வாழ்வில் இருந்து அறியப்படும் செய்தியாகிறது.
கடவுள் தரும் கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு, ''சோர்ந்து போகாமல் எப்போதும் ஜெபம் பண்ண வேண்டும்,'' என்கிறது பைபிள். இனியேனும் கஷ்டங்களைக் கண்டு கலங்காதீர்கள்.