/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
பதவி வரும் போது பரிவு வர வேண்டும்
/
பதவி வரும் போது பரிவு வர வேண்டும்
ADDED : மே 22, 2016 11:44 AM

'ஒருவருக்கொருவர் அன்பையும், சமாதானத்தையும் பரிமாறிக் கொள்ளுங்கள்' என ஆலய திருப்பலிகளில் சொல்லப்படுகிறது. மக்களும் முன்பின் தெரியாதவரானாலும், ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வார்கள். இந்த அன்பின் சக்தியைத் தெரிந்து
கொள்ளுங்கள்.
அமெரிக்காவைச் சேர்ந்த அரசியல்வாதி வில்லியம் மிக்கன்லேயும், தொண்டர் ஒருவரும் ஒரு டிராம் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தனர். சற்று தூரம் சென்றதும், ஒரு கர்ப்பிணிப் பெண் வண்டியில் ஏறினார். கஷ்டப்பட்டு நின்றார்.
வில்லியத்துடன் சென்றவர், அவள் எங்கே இடம் கேட்டு விடுவாளோ என பயந்து, தன் கையில் இருந்த செய்தித்தாளை முகத்துக்கு நேராக வைத்துக் கொண்டு படிப்பது போல நடித்தார். இதைக் கவனித்த வில்லியம்ஸ், அந்தப் பெண்ணை தன் இடத்தில் அமரச்சொல்லி விட்டு நின்று கொண்டார். சில ஆண்டுகள் கழிந்தன.
வில்லியம் மிக்கன்லே அமெரிக்காவின் 25வது அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். ஒருநாள், அவருடன் சென்ற தோழர் தன் முன்னாள் சகாவைச் சந்திக்க வந்தார்.
“அதிபரே! நானும் அரசியல்வாதிதானே! அமெரிக்க காங்கிரசுக்காக பல பணிகளைச் செய்துள்ளேன். என்னை ஒரு மாகாணத்தின் அதிபராக ஆக்குங்களேன்!” என்றார்.
மிக்கன்லே அவரிடம் 'பார்க்கலாம்' என சொல்லி அனுப்பி விட்டார். ஆனால் அந்த மாகாணத்துக்கு வேறொருவரை அதிபராக நியமித்து விட்டார். காரணம் என்ன தெரியுமா?
“ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு சிறிது தூரம் செல்ல இடம் கொடுக்காத இவரிடம், ஆட்சி சிக்கினால் மக்கள் என்னாவார்கள்?” என்ற சிந்தனை அதிபரின் மனதில் எழவே, அவரை அந்தப்பதவியில் நியமிக்காமல் இருந்து விட்டார்.
பார்த்தீர்களா! அன்பு எவ்வளவு உயர்ந்ததென்பதை! ஒருவருக்கொருவர் அன்புடனும், சமாதானத்துடனும் வாழுங்கள் என்ற போதனையை ஏற்று நடந்தால், வாழ்வில் உயர்வது உறுதி.