ADDED : மே 15, 2021 03:40 PM
நாடக ஆசிரியர் ஒருவரைப் பாராட்டி விருந்துக்கு அழைத்தார் அந்த நாட்டு அதிபர். நாடக ஆசிரியரும் அரண்மனைக்குப் புறப்பட்டார். ஊரிலுள்ள பிரமுகர்கள் பலரும் அதில் பங்கேற்க வந்தனர். வாயில் காவலர்கள் நாடக ஆசிரியரை உள்ளே அனுமதிக்கவில்லை. காரணம் அவரது எளிய தோற்றம். விருந்துக்குரிய படாடோபமான ஆடைகள் அவரிடம் இல்லை. ஆசிரியரும் சிரித்தபடியே புதிய ஆடை மாற்றி வருவதாகச் சொல்லிப் புறப்பட்டார். சிறிது நேரத்தில் உயர்ரக ஆடையுடன் அரண்மனைக்கு வந்தார்.
விருந்துணவு பரிமாறப்பட்டது. விருந்தினர்கள் மதுக்கோப்பையைக் கையில் எடுத்தனர். மது அருந்தி போதை ஏறியதும் தள்ளாடியபடியே ஆசிரியரிடம் ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். ஆசிரியரோ மதுவைத் தொடவில்லை. நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்தார். சட்டையைக் கழற்றி மதுக்கிண்ணத்தில் நனைத்தார். அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
''ஆடைக்குத்தான் இங்கு மதிப்பு. எனவே அதற்குத் தான் முதல் மரியாதை.'' என்றார்.
மனிதர்கள் எதை மதிக்கின்றனர்....திறமைக்கா. ஆடம்பரத்துக்கா. ஒருவரது நற்பண்புகள், திறமையை கொண்டே மதிப்பிட வேண்டும். தோற்றத்தைக் கண்டு அல்ல! விருந்தினர்களில் பொன் மோதிரமும், பளபளப்பான ஆடையும் அணிந்தவரைக் கண்டால் தனிக்கவனம் செலுத்துகிறோம். அதே சமயம் ஏழையை ஏளனம் செய்கிறோம்.
உன்மீது அன்பு கூறுவது போல் அடுத்தவர் மீதும் அன்பு கூறு.