ADDED : ஏப் 02, 2014 02:00 PM

ஆற்றின் குறுக்கே தானாக திறந்து மூடக்கூடிய ரயில் தண்டவாளத்துடன் இணைந்த பாலம் ஒன்று இருந்தது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் ரயில் வரும்போது அந்த பாலம் ஒரு பக்கமாக நகர்ந்து ரயில் தண்டவாளங்களை இணைத்து ரயில் செல்ல வழி அமைக்கும். ஆற்றின் கரையில் ஒரு சிறிய அறையில் கண்காணிப்பாளர் அமர்ந்து அதை இயக்குவார். அவரின் மகன் அடிக்கடி அங்கு வந்து, தன் தந்தை பாலத்தை இயக்குவதையும், அதன் மீது ரயில் செல்வதையும் பார்த்து மகிழ்வான்.
ஒருநாள் கண்காணிப்பாளர் அந்த நாளின் கடைசி ரயில் வரும் நேரத்திற்காக காத்திருந்தார். அந்த சமயத்தில் பாலத்தை மூடிவிட்டு, தண்டவாளத்தை இணைக்கும் பணியைத் தொடங்கினார். நிறைய பயணிகளைச் சுமந்தபடி ரயில் வரும் சப்தம் கேட்டது. கண்காணிப்பு அறையில் இருந்த அவர், நெம்புகோலின் உதவியுடன் தண்டவாளங்களை இணைக்க தீவிரமாக முயற்சித்தார்.
திடீரென, ''அப்பா! நீங்க எங்கே இருக்கீங்க?'' என்ற மகன் கூப்பிடும் குரல் கேட்டது.
அவரின் இதயமே நின்று விடுவது போலாகி விட்டது. சிறுவன் தந்தையைக் காண பாலத்தின் மீது நடந்து வந்து கொண்டிருந்தான்.
''மகனே! சீக்கிரம் ஓடி வா!'' என சத்தமிட்டார். ஆனாலும், சிறுவனின் சின்னஞ்சிறு கால்கள் வேகமாக பாலத்தைக் கடக்க
உதவவில்லை. நெம்புகோலை அப்படியே போட்டு விட்டு, தண்டவாளத்தை பொருத்தும் முயற்சியைக் கை விட்டார். ஆனாலும், தண்டவாளத்தை இணைக்காவிட்டால் பயணிகளோடு ரயில் ஆற்றில் கவிழ்ந்து விடுமே என்ற கடமையுணர்வும் மேலோங்கியது. பிள்ளையின் உயிரா? பயணிகளின் உயிரா? என்ற இக்கட்டான நிலையில் அவர் இருந்தார்.
தண்டவாளத்தை இணைத்து பயணிகளைக் காப்பது என துணிந்தார். அவரின் கடமையுணர்வால், ரயிலும் பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து சென்றது. ஆனால், ரயிலின் சக்கரங்கள் இரக்கமற்ற முறையில் சிறுவனின் உடலைச் சின்னா பின்னமாக்கி ஆற்றில் எறிந்தன. மனதை திடப்படுத்திக் கொண்டு ரயில் கடக்கும்வரை நெம்புக்கோலைத் தாங்கிப் பிடித்த படி நின்றார். ரயில் பயணிகளைக் காப்பதற்காக தன் மகனைத் தியாகம் செய்த விஷயத்தை மனைவியிடம் எப்படி சொல்வதென தெரியாமல், சோகத்துடன் வீட்டுக்கு நடந்தார்.
கண்காணிப்பாளர் பயணிகள் மீது வைத்த அக்கறையை நீங்கள் புரிந்து கொண்டது போல, கடவுளின் அன்பையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். இதே போல, நம்முடைய பாவங்களின் தண்டனைக்காக கடவுளும் தம்முடைய ஒரே மகனை பலி கொடுத்ததை மறைநூல் சொல்கின்றது.
'உலகிற்கு தண்டனை தீர்ப்பளிக்க அல்ல! தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார் (யோவான் 3:17) என்ற பைபிள் வசனம் இங்கு குறிப்பிடத்தக்கது.