ADDED : ஜூன் 03, 2022 12:08 PM

ஆசிரியை ஒருவர் மாணவர்களிடம், ''மகிழ்ச்சி எங்கே உள்ளது'' எனக் கேட்டார். அதற்கு அவர்கள் சினிமா, பீச், பார்க் என ஆளாளுக்கு ஒரு பதிலை சொன்னார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
''சரி கேள்வியை மாற்றிக் கேட்கிறேன். அழகு எங்கே இருக்கிறது'' என கேட்டார். இதற்கும் பச்சைப் பசேல் என்கிற செடிகள், அவற்றில் பூத்திருக்கும் வண்ணப்பூக்கள், பூக்களில் அமரும் வண்ணத்துப் பூச்சிகள், வானவில், அருவி என பல பதில்களை சொன்னார்கள்.
''நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால் அந்த அழகை பார்க்க கண்கள் வேண்டும் அல்லவா'' என அவர் கேட்டதற்கு, '' கண்கள் இல்லையெனில் எப்படி பார்ப்பது'' என மாணவர்கள் சிரித்தனர்.
''அதே மாதிரிதான் மகிழ்ச்சியும். நீங்கள் சொன்ன விஷயங்களில் எல்லாம் மகிழ்ச்சி இருக்கலாம். ஆனால் அதை ரசிக்க நல்ல மனம் வேண்டும். அதாவது மனம் அமைதியாக இருந்தால்தான் எதையும் ரசிக்க முடியும்'' என்றார் ஆசிரியை.

