ADDED : மார் 05, 2023 08:21 AM

உச்சி வேளையில் தபால்காரர் பணியை வேகமாக செய்து கொண்டிருந்தார். ஜான்சி என்ற பெயருடைய முகவரியை தேடி அவ்வீட்டை அடைந்தார். வீட்டின் காலிங்பெல்லை அழுத்திய போது வருகிறேன் என்ற சத்தம் மட்டும் கேட்டது. சிறிது நேரத்தில் பொறுமையிழந்த தபால்காரர் எரிச்சல் அடைந்தவாறு மீண்டும் அழுத்தினார் காலிங்பெல்லை.
உள்ளிருந்த ஜான்சி தவழ்ந்து வந்து கதவைத் திறந்தாள். அன்றிலிருந்து அவ்வீட்டிற்கு வரும் தபால்களை பொறுமையாகவே கொடுப்பார். ஒருநாள் சகோதரரே... காலில் செருப்பு இல்லாமல் தினமும் பணி செய்கிறீர்கள். எனது அன்பு பரிசாக இந்த ஒரு ஜோடி செருப்பினை வாங்கிக் கொள்ளுங்கள் என்றாள் ஜான்சி.
கண்களில் கண்ணீர் கசிந்தவாறு இவ்வளவு நாள் நாம் இந்தப்பெண்னை பற்றி எதுவும் நினைக்க வில்லை. ஆனால் அவள் நம்முடைய நலனில் எவ்வளவு அக்கறை காட்டியுள்ளாள் என நினைத்தார். பின்னர், மேலதிகாரியிடம் இனிமேல் என்னை அந்த தெருவிற்கு அனுப்பாதீர்கள். கால்கள் இல்லாத ஜான்சிக்கு உதவ முடியவில்லையே என்ற உணர்வு வாட்டுகிறது என்றார் தபால்காரர்.
இது தான் விஷயமா... இலவசமாக செயற்கை கால்கள் பொருத்திக் கொள்ளும் தொண்டு நிறுவனத்தின் தொடர்பு எண்ணை கொடுத்தார் அதிகாரி.மகிழ்ச்சி அடைந்த தபால்காரர் தனிப்பட்ட முறையில் ஜான்சியை பார்க்க விரைந்தார்.