ADDED : ஜன 24, 2014 12:12 PM

அவனோ இளம் வயது வாலிபன். அவனுக்கு முன்பாக வளமான வாழ்வு இருந்தது.
இந்நிலையில், அவன் முழுநேர ஊழியனாய் வரும்படி உறுதியுள்ள தீர்மானம் உடையவனாய் காணப்பட்டான். இது மற்றவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
''நீ இப்படிப்பட்ட தீர்மானத்திற்குள் வரக் காரணம் என்ன? என ஒருவர் கேட்டார். அதற்கு அந்த வாலிபன், தன் பள்ளிநாட்களில் ஒருமுறை கேட்ட பிரசங்கமே இந்த தீர்மானத்திற்கு வர உந்தித் தள்ளியதாகக் கூறினான்.
இந்த பதிலைக் கேட்ட மற்றவர்கள், ''வாழ்வில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்த பிரசங்கியாரின் பெயரைக் கூற முடியுமா?'' எனக் கேட்டனர்.
அவன், ''ஐயா! அன்று பேசிய பிரசங்கியாரின் பெயர் தெரியாது. ஆனாலும், அவர் மூலமாக பேசிய தேவன் இயேசு கிறிஸ்துவை எனக்கு நன்றாகத் தெரியும்,'' என்று கூறினான்.
போதகர் தா. ஹென்றி ஜோசப் என்பவர், ''பிரசங்கம் பண்ணுவது மேலான ஊழியம்.
ஆனாலும், பேசி முடித்த பின்பு, கேட்பவர்களின் உள்ளத்தில் நிலைத்திருப்பது பிரசங்கியாரா? அல்லது பிரசங்கப் பொருளா? அல்லது தேவனா?'' என்று தம் சபை மக்களிடம் கேட்டது குறிப்பிடத்தக்க விஷயம்.
இந்த நவீன காலத்தில் உலகெங்கும் திருச்சபைகள் வேகமாக பெருகி வருகிறது. பல பிரசங்கியார்கள் உருவாகியுள்ளனர். தேவனுடைய ஊழியர்களை, தேவன் தனது வல்லமையால் பயன்படுத்தி வருகிறார். ஆனால், திருச்சபை விசுவாசிகளில் பலர் தேவனை மனதில் நிலைப்படுத்திக் கொள்ளாமல், பிரசங்கியாரின் புகழ் பாடுகின்றனர். பெரியவர், சிறியவர், பணக்காரர், ஏழை, பெரியசபை போதகர், சிறியசபை போதகர் என்றெல்லாம் வித்தியாசம் பார்க்கும் மனநிலை சில இடங்களில் உள்ளது.
தேவனுடைய வார்த்தையைப் பேசும் நபர் யாராக இருந்தாலும் சரி, பேசும் நபர் முக்கியமல்ல. ஊழியர்களை கனம் பண்ண வேண்டும். அவர்களுடைய வார்த்தைகளை மதிக்க வேண்டும். அதே நேரத்தில், அவர்களை தலையில் வைத்து ஆடக்கூடாது. ஆதிசபை காலத்திலேயே, ''நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ் துவைச் சேர்ந்தவனென்றும்....'' (1கொரி.1;12) சொல்லிக் கொண்டிருந்தனர். இயேசுவே நமக்காக ரத்தம் சிந்தினார். ஆகவே, ஊழியர்களை மேன்மை பாராட்டாதபடி, அவர்கள் ஆராதிக்கிற இயேசுவையே மேன்மை பாராட்டுவோம்.