/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
கதைகள்
/
நீயும் நானுமா... திருடா நீயும் நானுமா...
/
நீயும் நானுமா... திருடா நீயும் நானுமா...
ADDED : பிப் 25, 2022 10:35 AM

கிரேக்கத்தை ஆட்சி செய்த அலெக்சாண்டர் முன்பு, கடல் கொள்ளைக்காரன் ஒருவன் விசாரணைக்காக நிறுத்தப்பட்டான்.
''இப்படியொரு கேவலமான வேலைகளை செய்ய உனக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது. அநியாயமாக வியாபாரிகளிடம் இருந்து திருடலாமா...'' எனக்கேட்டார் அலெக்சாண்டர்.
''பிரபு! நான் ஒன்று சொன்னால் தாங்கள் தவறாக நினைக்கக்கூடாது. இருந்தாலும் அதை தற்போது சொல்லியே ஆக வேண்டும்'' என இழுத்தான் கொள்ளைக்காரன்.
''மூடனே! என்னை கோபப்படுத்தாதே. எதுவாக இருந்தாலும் சொல்'' என சீறினார்.
''உலகத்தையே அடக்கியாள வேண்டும் என்ற துணிச்சல் உங்களுக்கு எங்கிருந்து வந்ததோ, அங்கிருந்து தான் எனக்கும் துணிச்சல் வந்தது'' என்றான்.
''என்னடா உளறுகிறாய். நான் பல இடங்களை கைப்பற்றி ஆட்சி செய்து வருகிறேன். நீயும் நானும் ஒன்றா'' என மறுத்தார் அலெக்சாண்டர்.
''உண்மையைத் தான் சொல்கிறேன். என்னிடம் ஒரு கப்பல் இருப்பதால் நான் கடல் கொள்ளைக்காரனாக இருக்கிறேன். தங்களிடம் கப்பல் படையே இருப்பதால், அரசராக உங்களை கொண்டாடுகின்றனர். இருவரும் செய்யும் செயல் ஒன்றே. ஆனால் அதனை பார்க்கும் விதத்தில்தான் வேறுபடுகிறோம்'' என விளக்கம் அளித்தான்.
இதைக் கேட்டவர் வாயடைத்துப் போனார். உடனே அவனை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.