ADDED : நவ 12, 2012 09:57 AM
ஒரு சொற்பொழிவாளர் இயேசுவின் மகிமை பற்றி மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு இலக்கண இலக்கியங்களில் தேர்ந்த ஒரு பேராசிரியர் வந்திருந்தார். சொற்பொழிவாளர் தனக்கிருந்த அறிவைக் கொண்டு, மேடையில் பேசினார். இலக்கணப்பிழைகள் சற்று அதிகமாக இருந்தாலும், அவர் பேசும் கருத்துக்களை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர் மக்கள்.
பேராசிரியருக்கு பொறுக்க முடியவில்லை. வேகமாக எழுந்தார்.
பேச்சாளரை நோக்கி, ''நீர் பேசுவது ஒன்றும் சரியில்லை. ஆங்கிலத்தை இப்படியா கொலை செய்வீர்? இலக்கணப் பிழைகள் ஏராளமாக இருக்கின்றன. ஒரு வாக்கியம் கூட சரியில்லை. நீர் இனிமேல் பேசக்கூடாது,'' என்றார்.
பேச்சாளர் மிகவும் அமைதியாக, ''பேராசிரியரே! தங்கள் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்கிறேன்.
இலக்கணம் தெரியாதவனாக இருந்தாலும் கூட, கடவுளின் கிருபையை மேடையேறி பேசுகிறேன். உங்களைப் போன்ற படித்தவர்கள் மேடையேறி என்றாவது பேசியிருக்கிறீர்களா? நீங்களெல்லாம் கடவுளுக்கு சேவை செய்வதில் இருந்து ஒதுங்கியிருப்பதால் தானே என்னைப் போன்ற அறிவிலிகள் மேடை ஏற வேண்டிய நிலை வந்தது?'' என்றார்.
பேராசிரியருக்கு அப்போது தான் தன் தவறு புரிந்தது. சொற்பொழிவாளரை தவறாகப் பேசியதற்காக வருத்தப்பட்டார்.
பைபிள் அழகாகச் சொல்கிறது.
''பிறர் கண்ணிலுள்ள தூசியைப் பாராதே, உன் கண்ணிலுள்ள உத்தரத்தைப் பார்,'' என்று.