
ஆண்டவருக்கு மனிதன் என்ற பெரிய உயிர், பிராணி என்ற சிறிய உயிர் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. அவர் எல்லாவற்றின் மீதும் மிகுந்த கருணை கொள்கிறார்.
ஒரு சுண்டெலியின் அளவுள்ள 'ப்போசும்' என்ற சிறிய பிராணி வடஅமெரிக்காவில் இருக்கிறது. இது சிறிய பிராணியாக இருந்தாலும், இதில் அநேக விசேஷத்தன்மைகள் காணப்படுகின்றன.
இந்த பிராணியின் பெண் இனத்திற்கு, கங்காரு போன்று வயிற்றில் பை உள்ளது. பிறக்கும் குட்டிகளை, இரண்டு மாதம் வரை அந்தப் பையில் வைத்தே பால் கொடுத்து பராமரிக்கிறது. அதன்பின், சில மாதங்களுக்கு குட்டிகளை முதுகில் ஏற்றிக்கொண்டு செல்கிறது. அந்த குட்டிகள், நம் ஊர் பஸ்களில் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு செல்லும் பயணிகள் போல, தாயின் உடலில் தொற்றிச் செல்கிறது. பழவகை, கொட்டைகள், தவளை, பூச்சிகளை தானாகவே தின்னும் காலம் வரும் வரை தாயுடன் இருக்கிறது. பின், இரவுப்பொழுதுகளில் மட்டும் தானாகவே மேய ஆரம்பிக்கிறது.
இவற்றை நரி, ஓநாய், காட்டுப்பூனை போன்றவை வேட்டையாட வருகின்றன. அவை விரட்டும் போது, இவை வேகமாக ஓடி தப்ப முயற்சிக்கிறது. முடியாத பட்சத்தில், சுருண்டு விழுந்து, இறந்தது போல் நடிக்கிறது. அது மட்டுமல்ல! தான் உ<டலிலிருந்து, செத்த விலங்குகளின் <உடலிலிருந்து வரும் நாற்றத்தைப் போல் துர்நாற்றமடிக்கச் செய்கிறது.
அவற்றை முகர்ந்து பார்க்கும் மிருகங்கள், அந்த துர்நாற்றத்தைச் சகிக்காமல் வேறு பக்கம் போய் விடுகிறது. நான்கு மணி நேரம் வரை இப்படியே கிடக்கின்றன அந்த சிறிய பிராணிகள். இனி ஆபத்து இல்லை என்று தெரிந்த பிறகு அங்கிருந்து ஓடிவிடும்.
பாருங்களேன்! ஒரு சிறிய பிராணிக்கு தேவன் கொடுத்திருக்கும் அறிவை! ஆக, தேவன் இந்த சிறிய பிராணியையும் நேசித்து, அதற்கு கொடுத்திருக்கும் அறிவைப் பாருங்கள். அவர் மனுக்குலத்திற்கும் (மனித குலம்) நித்திய மரணத்திற்கு அல்லது நரகத்திற்கு தப்புவிக்கும் மார்க்கத்தையும் அறிவையும் தந்திருக்கிறார். நாம் என்ன செய்திருக்கிறோம் என்று நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம்.
இப்போது சொல்லுங்கள்...ஆண்டவரின் கருணைக்கு மனிதன் போன்ற பெரியவன், 'ப்போசும்' போன்ற சிறிய பிராணி என வித்தியாசமில்லை. ஆம்...அவரின் கருணைக்கு சிறிது பெரிது என்ற அளவும் இல்லை.
தேவனுடைய வார்த்தை இதழிலிருந்து...