
தண்ணீரை பூமியின் சக்தியென்றும், நெருப்பை வானத்தின் சக்தி என்றும் கிரேக்க அறிஞர்கள் நம்பினார்கள். ஏனெனில், மழை பூமியை நோக்கி வருகிறது, நெருப்பு வானத்தை நோக்கி எழுகிறது என்பது அவர்கள் வாதம்.
ஆனால், சாலமன் என்ற ஞானி நெருப்பின் ஜூவாலையை அன்பின் அடையாளமாகக் கருதினார். நெருப்பை மனதிற்குள் உருவாகும் அன்புக்கு அவர் ஒப்பிட்டார்.
ரிச்சர்ட் உம்பிராண்டு என்பவர், கர்த்தர் மேல் மிகுந்த அன்பு கொண்டவர். அவரது மனதில் எரிந்த அன்பு நெருப்பை அணைக்கும் வகையில், அதிகாரிகள் அவரை சித்ரவதை செய்தனர். இயேசுவை மறந்துவிடும்படியும், எக்காரணம் கொண்டும் இயேசுவை பற்றி மக்கள் மத்தியில் பேசக்கூடாதென்றும் எச்சரித்தனர்.
ஆனால், தன் மனதில் எரியும் இயேசு என்ற பாசத்தீ அணையாது என அவர் சொல்லிவிட்டார். எனவே, அவரது உடலில் பதினேழு இடங்களில் கத்தியால் குத்தி சதையை அறுத்து உடலில் குழிகள் இட்டனர். அதற்கும் அவர் மசியவில்லை. எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் அவர் தன் கருத்தை மாற்றிக்கொள்ளவே இல்லை.
ஒருமுறை அவரை பேட்டி காண நிருபர்கள் வந்தனர். அவர்கள் சாலமனிடம், ''இவ்வளவு சித்ரவதைகளையும் பொறுத்துக் கொண்டு, கிறிஸ்துவை நீங்கள் மறக்க மறுத்தது ஏன்?'' என்று கேட்டனர். அதற்கு அவர்,''எனக்குள் அவர் மீது நேச அக்னி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதை எந்த தண்ணீராலும் அணைக்க முடியாது,'' என்று பதிலளித்தார்.
அன்புக்கு இன்னொரு பெயர் மனஉறுதி. அது மனிதர்களை நல்ல முறையில் வாழ வைக்கும். எவ்வளவுக்கெவ்வளவு பாடுகள் (துன்பம்) வந்தாலும், அதை மன உறுதியுடன் சமாளிப்பவருக்கு தேவனின் ராஜ்யத்தில் நிச்சயம் இடமுண்டு.