ADDED : அக் 07, 2011 11:44 AM

விவசாயி ஒருவர் தன்னுடைய விவசாயப் பண்ணை வீட்டின் கூரை உச்சியில் ஒரு திசைகாட்டும் கருவியைப் பொருத்தியிருந்தார். அதில் 'தேவன் அன்பாகவே இருக்கிறார்' என்று வெகு தூரத்திலிருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியும் வண்ணமாக எழுதிவைத்திருந்தார். அந்தப் பண்ணையைக் கடந்து சென்ற ஒருவர் ''தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று திசைகாட்டும் கருவியில் எழுதி வைத்திருக்கிறீர்களே, ஏன்?'' என்று கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி, ''தென்றல் வீசினாலும், புயல் வீசினாலும் திசைகாட்டும் கருவி ஒரே திசையை மட்டும் தான் எப்பொழுதும் காட்டிக் கொண்டேயிருக்கும். கால மாற்றத்தாலோ, காற்றின் திசையின் மாற்றத்தாலோ அது மாறுவது இல்லை. தேவனுடைய அன்பும் அப்படிப்பட்டது தான். அது மாறுவதே இல்லை. ஆனால், திசைகாட்டும் கருவிக்கு மேல் பொருத்தப்பட்டிருக்கும் சேவல் பொம்மை காற்றடிக்கும் திசைக்கு ஏற்ப மாறிக் கொண்டேயிருக்கும். உலகக் காரியங்களால் சஞ்சலப்படாமல் தேவனுடைய அன்பில் சார்ந்து உறுதியாய் நிற்கத்தக்கதான செய்தியை கூறவே, நான் இவ்வாறு எழுதி வைத்திருக்கிறேன்'' என்று சொன்னார்.
''அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார்'' (1 யோவா, 4:8)என்ற வசனம் நினைவுக்கு வருகிறதல்லவா!

