ADDED : பிப் 05, 2014 10:22 AM

கணவன் மீது மனைவியும், மனைவி மீது கணவனும் சந்தேகப்படக்கூடாது. ஒரு மாணவனுக்கு தனது பாடங்களில் சந்தேகம் வரக்கூடாது. அதுபோல் தான் ஆண்டவரை வணங்குவதிலும், அவரை நம்புவதிலும் ஏற்படும் சந்தேகம் கூடாது. ''சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பானவன். அப்படிப்பட்ட மனுஷன், தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக,'' என்கிறது பைபிள்.
''எவனாகிலும் இந்த மலையை பார்த்து: 'நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டு போ' என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்ன படியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்கிறார் இயேசு.
ஆம்... எதையும் சந்தேகத்துடன் பார்க்கக்கூடாது.
மாணவர்கள், படிப்பில் ஏற்படும் சந்தேகத்தை ஆசிரியரிடமும், குடும்பத்தினர் அவர்களுக்கிடையே இருக்கும் பிரச்னையை பேசியும் தீர்த்துக் கொள்ள வேண்டும். சந்தேகத்துடன் இருந்தால் நிம்மதியே இருக்காது. எனவே, சந்தேகம் இருந்தால் அதனை உடனே போக்கி, நம்பிக்கையை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.