/
ஆன்மிகம்
/
கிறிஸ்துவம்
/
செய்திகள்
/
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!
/
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!
ADDED : டிச 03, 2012 12:48 PM

''இந்த உலகத்தில் பிறந்தேன், நன்றாகப் படித்தேன், டாக்டரானேன், இன்ஜினியர் ஆனேன், தொழிற்சாலை துவங்கினேன், பெற்றவர்கள் மகிழ்ந்தார்கள், மனைவி மகிழ்ச்சியில் திளைத்தாள், பிள்ளைகளுக்கு ஆளுக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்தேன். சர்வதேச நாடுகள் என்னை அழைத்தன. என் சாதனையைப் பாராட்டி பல விருதுகளை அள்ளித்தந்தன. இப்போது, நான் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் தான் தங்குகிறேன். விமானங்களில் பறக்கிறேன். என் வாழ்வு அர்த்தமுள்ளதாக இருக்கிறது,''... இப்படி நீங்கள் பெருமைப்படுகிறீர்களா?
நிச்சயமாக, நீங்கள் சாதனையாளர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 'உங்களால் சமுதாயத்திற்கு பலன் ஏதும் கிடைத்ததா?' என்று உங்களையே கேட்டுப்பாருங்கள்.
ஜோனாஸ்சால்க் என்ற விஞ்ஞானி ஒருவர் இருந்தார். அமெரிக்க அரசு இவருக்கு பல விருதுகளை வழங்கியது. புளு காய்ச்சல் பரவிய காலத்தில், மருந்து கண்டுபிடிக்கும் வேலை இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை வெற்றிகரமாக செய்து முடித்து பரிசுகளைப் பெற்றார்.
அவரது இல்லத்தில் எல்லாரும் பெருமைப்பட்டனர்.
ஆனால், ஜோனாசிற்கு இதில் திருப்தியில்லை. ''இந்த உலகத்தில் எத்தனையோ பேர் ஊனத்துடன் நடக்க முடியாமல், கை கால்களை அசைக்க முடியாமல் இருக்கிறார்கள். போலியோ என்ற இந்த கொடிய நோயை ஒழிக்க நம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். இளமையிலேயே இதை இல்லாமல் செய்ய வேண்டும். என்ன செய்வது,'' என ஆலோசித்தார்.
தன் குழுவினருடன் இணைந்து வெற்றிகரமாக போலியோவுக்கு மருந்து கண்டுபிடித்தார். இப்போது, மனம் திருப்தியடைந்தது. இன்று உலகமே அவரை வாழ்த்துகிறது.
சொந்த சாதனைகளுக்காக விருது பெறுவதை விட, உலகத்துக்கே உதவுவதற்கு உங்கள் கல்வியும், அறிவும் பயன்படட்டும். இன்று உலகெங்கும் இலவசமாக போலியோ மருந்து கிடைக்கிறது. பல குழந்தைகள் போலியோ மருந்தால், இன்று நிமிர்ந்து நடக்கிறார்கள்.
பைபிளில் ஒரு வசனம் உண்டு. ''நீதிமானோ பிசினித்தனம் (கஞ்சத்தனம்) இல்லாமல் கொடுப்பான்,'' என்று. ஆம்... நீங்கள் உலகத்துக்கு நல்லதை கொடுங்கள். கஞ்சத்தனமின்றி கொடுங்கள். இந்த உலகம் உள்ளளவும் உங்களை நினைவில் கொள்ளும்.