
1856ல், இங்கிலாந்து ராணி விக்டோரியா, புதைபொருள் ஆராய்ச்சியாளர்களிடம் ஜெருசலேமில் இருந்த 'பெதஸ்தா' என்ற குளம் குறித்து ஆராய்ச்சி செய்யுமாறு உத்தரவிட்டார்.
யோவான் 5ம் அதிகாரம், 1-15 வசனங்களில் பெதஸ்தா குளம் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
'பெதஸ்தா' என்றால் 'இரக்கத்தின் வீடு'. ஜெருசேலம் பட்டணத்தில் இருந்த அநேக பிரதான வாசல்களில் ஆட்டுச்சந்தை வாசல் எனப்படும் வாசல் ஒன்றுண்டு. அதன் வெளிப்புறத்தில் தான், இயேசு சிலுவையில் அறையப்பட்ட கல்வாரி மலையும், உட்புறத்தின் ஐந்து மண்டபங்களில் பெதஸ்தா குளமும் இருந்தது. மக்களுக்காக ஒரு ஆட்டைப் போன்று, வதை பட்டு உயிரைத் தியாகம் செய்வதற்காகத் தான், அந்த ஆட்டுவாசலை இயேசு முன்னதாகவே தேர்ந்தெடுத்து வைத்திருந்தார் எனலாம்.
அந்த ஐந்து மண்டபங்களில் இருந்த ஐந்து வகை மனிதர்களை, சபைகளில் இருக்கும் ஐந்து விதமான மக்களுக்கு உவமையாக யோவான் கூறுகிறார். அந்தக் குளம் கலங்கும்போது, யார் ஒருவர் முந்திக் குளத்தில் இறங்குவாரோ அவர் எப்படிப்பட்ட வியாதியஸ்தனாக இருந்தாலும், குணமாகி விடுவார் என்று ஒரு ஐதீகம். அன்றைய கால கட்டத்தில் ஒருவன் இரட்சிக்கப்பட வேண்டுமானால், அவன் தன் கிரியைகளில் அதைக் காட்ட வேண்டும். இயேசு கிறிஸ்துவோ, தன்னை விசுவாசிக்கிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் இரட்சிக்கப்படுவான் என்று அங்கு நிரூபித்தார்.
38 வருடம் வியாதியாயிருந்த ஒரு மனுஷனை அங்கே சந்தித்து குணமாக்குகிறார். இன்றைக்கும் அவர், பொறுமையாக, குணமடைய வேண்டும் என்ற சிந்தனைகளோடு இருப்பவரைக் குணமாக்க வருகிறார். நாம் அவரோடு உரையாடத் தயாராக இருந்தால், அவர் உதவிடத் தயாராக இருக்கிறார்.
மூன்று வருடத்திற்குப் பிறகு புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள், 1138ல் நடந்த சிலுவைப் போரின் போது, பெதஸ்தா குளம் அருகேயிருந்த 'புனித ஆனி' தேவாலயத்தை இடித்தபோது, பெதஸ்தா குளம் மூடப்பட்டு விட்டது தெரிய வந்தது. பின்பு மகாராணியின் உத்தரவின்படி, தூர்ந்து போன பெதஸ்தா குளம் புதுப்பிக்கப்பட்டது. தேவ ஆலயமும் கட்டப்பட்டது. ஆனால், அந்தக் குளத்தில் நடந்த அற்புதத்தை விட, பெரிய அற்புதங்களை நம் வாழ்வில் நிகழ்த்த இயேசு தயாராக இருக்கிறார்.
அவரின் கட்டளையை கடைபிடித்து ஆசிர்வாதத்தைப் பெறுவோமாக!