''அவ்வாறே கணவரும் தங்கள் மனைவியரை உடலென கருதி அன்பு செலுத்துவது கடமையாய் இருக்கிறது'' என்கிறது பைபிள்(எபேசியர் 5:19)
சிறந்த இல்லற வாழ்வு என்பது பொருத்தமான மணமகனையோ, மணமகளையோ கண்டுபிடிப்பதில் அல்ல. இருவரும் ஒருவரோடு ஒருவர் இசைந்து வாழ்வதேயாகும். மணமகளின் தந்தை, மகளைக் கைபிடிக்கப் போகிறவர் கற்ற வித்தை, தொழில் திறமை, மதிநுட்பம் இவற்றை எண்ணிப் பார்ப்பார். அவளது தாயோ, பெற்ற செல்வம், நற்குணம் இவைகளை ஆராய்ந்து பார்ப்பார்.
அவரின் அழகை விரும்புவாள் மணப்பெண்.
மணப்பெண் வேலை செய்கிறாளா? என்பதும் பல நடுத்தர குடும்பத்தினர் கேட்கும் கேள்வி.
இத்தகைய காரணங்கள் பொருந்தி வராத பட்சத்தில், சில திருமண பேச்சுகள் முறிவடைவதும் உண்டு. ஒருவருக்கொருவர் குணத்தில் பொருந்தி ஒற்றுமையாய் வாழ்வதே நல்லதொரு இல்லறம்.
இல்லற வாழ்வு குறித்து நமக்கு வரைமுறை அளிப்பது எபேசியர் நிருபம் 5:1-33. அவ்வாறே கணவரும் மனைவியரை தங்கள் உடலெனக் கருதி அன்பு செலுத்த கடமைப்பட்டிருக்கிறார்கள். தம் உடலை யாரும் வெறுப்பதில்லை. பேணி வளர்க்கிறார்.(எபேசியர் 5:19-20)
மனைவியும் தன் கணவருக்கு அஞ்சி வாழ வேண்டும்.(எபேசியர் 5:33)
மதிநுட்பம், பொறுமை, சாந்தம், தயவு, ஈகை, அடக்கம் இவை போன்ற நற்குணங்களை எல்லாம் சேர்த்து இணைக்கும் அன்பே இல்லற வாழ்வுக்கு அடிப்படையானவை.