ADDED : ஜூன் 09, 2015 10:04 AM

சிலர் படிப்பில் தோற்கிறார்கள், சிலர் விளையாட்டில் தோற்கிறார்கள், சிலர் ஆராய்ச்சிகளில் தோற்கிறார்கள்...
இவர்களில் பலர் வாழ்க்கையிலேயே தோற்றுவிட்டதாகக் கருதி தங்கள் முயற்சியை கைவிட்டு விடுகிறார்கள். தோல்வி தந்த அடியை மறக்க ஒரு சிலர் கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகிறார்கள். ஒரு சிலரோ உயிரையே மாய்த்துக் கொள்கிறார்கள்.
இங்கிலாந்தில் தாமஸ் ஸ்டார்செல் என்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் இருந்தார். இந்த சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மனித உயிர்களைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் இவரிடம் இருந்தது. 1958ல், இரண்டு நாய்களைக் கொண்டு சோதனை
செய்தார். அவை உடனே இறந்து விட்டன. அவர் கலங்கவில்லை. ஒரு வாரம் கழித்து, மேலும் சில நுட்பங்களைப் புகுத்தி, மேலும் இரண்டு நாய்களுக்கு சிகிச்சை செய்தார். அவை ஒரு வாரம் வரை உயிருடன் இருந்தன.
இதன்பிறகு ஒரு மனிதருக்கு இந்த சோதனையை நடத்தினார். ரத்தப்போக்கு அதிகமாக ஏற்பட்டு அந்த நபர் இறந்து விட்டார். 1963ல் அறுவை சிகிச்சை செய்பவர்கள் மூலம் கிருமிகள் பரவுவதாக ஒரு பிரச்னை கிளம்ப, அரசாங்கம் இத்தகைய சிகிச்சைகளுக்கு தடை விதித்து விட்டது.
தடை நீங்க ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன. 1968ல் மேலும் சில நுட்பங்களைப் புகுத்தி ஏழு குழந்தைகளுக்கு சிகிச்சை செய்தார்.
அவற்றில் நான்கு குழந்தைகள் ஆறு மாதம் வரை உயிருடன் இருந்தன. படிப்படியாக முன்னேறிய அவரது முயற்சி 1981ல் பெரும் வெற்றியைத் தந்தது. ஆபரேஷன் செய்த 22 பேரில் 19 பேர் நீண்டகாலம் வாழ்ந்தனர்.
இப்போது இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடக்கக் காரணம் தாமஸின் விடாமுயற்சியான உழைப்பே ஆகும்.
பைபிளில் உழைப்பின் பெருமை பற்றி பேசப்பட்டுள்ளது.
* உழைப்பாளி அவமானப்படத் தேவையில்லை.
* உண்மையில் அறுவடை செய்ய வேண்டியதோ ஏராளமாயிருக்கிறது. ஆனால், வேலையாட்களோ வெகு சிலர் தான் இருக்கிறார்கள்.
* உன் முகத்தின் வியர்வையில் ரொட்டி சாப்பிடுவாயாக.
* உழைக்கும் குடியானவனே விளைச்சல் கனிகளில் முதற்பங்கு பெற வேண்டும்.
இந்த வசனங்களை என்றும் மறக்காதீர்கள்.