ADDED : ஜூலை 12, 2019 11:04 AM

* பொருள் புரியாமல் ஸ்லோகம் சொன்னால் பலன் உண்டா?
ஆர்.பூமாதேவி, புதுச்சேரி
நோய் தீர மருத்துவரிடம் செல்கிறோம். அவர் தரும் மருந்துகளை நம்பிக்கையோடு சாப்பிட்டு குணமடைகிறோம். மருந்து சீட்டுக்குப் பொருள் புரிந்து மருந்து சாப்பிடுவது என்றால் நிலைமை என்னாகும்? ஸ்லோகங்களின் சக்தியால் பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவசியம். பொருள் புரிந்தாலும், புரியாவிட்டாலும் மந்திரங்களுக்குரிய பலன் ஜபிப்பவரையே சேரும்.
சாம்பிராணி புகையை வீடு முழுவதும் காட்டணுமா?
ப.ஹரிபிரியா, திருப்பூர்
செவ்வாய், வெள்ளியன்று வீடு முழுவதும் சாம்பிராணி புகையிடுவது நல்லது. இதனால் திருஷ்டி, கடன் பிரச்னை தீரும். கிருமி நாசினி என்பதால் நோய் அணுகாது.
வாசலில் திருஷ்டி பொம்மை வைப்பது கட்டாயமா?
கே.நியாஸ், கடலுார்
இது மனதைப் பொறுத்த விஷயம். திருஷ்டியில் இருந்து விடுபட பொம்மையை வாசலில் கட்டுவது நல்லது.
* குடும்பத்தினர் நலமாக வாழ என்ன செய்யலாம்?
சி.காந்திமதி, மதுரை
குடும்பத்தினர் அனைவரும் வாரத்தில் ஒருநாள் (செவ்வாய் அல்லது வெள்ளி) தலைக்கு குளித்து கோயிலுக்கு செல்லுங்கள். அன்று சைவ உணவு மட்டும் உண்ணுங்கள்.
பள்ளியறை பூஜை ஏன்?
ஜி.மித்ரா, பெங்களூரு
உயிர்களுக்கு ஓய்வளிக்கும் விதமாக சிவமும், சக்தியும் ஒடுங்கும் நிகழ்ச்சி பள்ளியறை பூஜை. இதை தரிசிக்க அமைதி, திருமண யோகம், குழந்தை பேறு கிடைக்கும்.
அடம் பிடிக்கும் குழந்தைகளைத் திருத்த பரிகாரம் உண்டா?
வி.தர்ஷன், சென்னை
பரிகாரம் இல்லை. சேட்டை செய்வது தானே குழந்தைக்கு அழகு. அவர்களோடு விளையாடுங்கள். கஷ்டம் தெரியாது. அவர்களின் கவனத்தை, ஆர்வத்தை, பயனுள்ள பொழுதுபோக்காக, அறிவுப்பூர்வமாக மாற்றுங்கள்.