
சதுர்த்தி என்றாலே கொழுக்கட்டை நினைவுக்கு வந்து விடும். சில 'சூப்பர் டேஸ்ட்' கொழுக்கட்டை வகைகளை இன்று மட்டுமல்ல! மாத சதுர்த்தி நாட்களிலும் செய்து விநாயகருக்கு படைத்து பிரசாதமாக சாப்பிடலாம், உடலுக்கும் நல்லது, மனதுக்கும் நல்லது.
மோதகம்
தேவையானவை
பச்சரிசி- அரை கிலோ
வெல்லம்- அரை கிலோ
கடலைப்பருப்பு- 300 கிராம்
ஏலக்காய்- 7
தேங்காய்- 1
சுக்கு- சிறிதளவு.
செய்முறை: ஊறவைத்த பச்சரிசியை மாவாக இடித்து வாணலியில் வறுக்க வேண்டும். பின்னர் கடலைப்பருப்பை இரண்டு மணிநேரம் ஊறவைச்சு அவிக்க வேண்டும். வெல்லத்தை தூள் செய்து தேங்காய்த்துருவல், ஏலக்காய் பொடி ஆகியவற்றுடன் சேர்க்க வேண்டும். தேங்காய் துருவலை நெய்யிலிட்டு வறுத்து தயாரா வைத்துவிட்டு, அவித்த கடலைப்பருப்பை மிக்சியிலிட்டு லேசா அரைக்க வேண்டும். மிக்சி இல்லாவிட்டால் கையால் பிசைஞ்சுக்கொள்ளலாம். பின்பு பிசைந்த கடலைப்பருப்பு, வெல்லத்தூள், ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து வறுத்த தேங்காயுடன் போட வேண்டும். திரவ நிலைக்கு வந்தவுடன், இந்த கலவையை வாணலியில் இட்டு சிறிது நேரம் கிண்டினால் லேகியம் போல் ஆகும். இதை 'பூரணம்' என்பார்கள்.
பச்சரிசி மாவில் கொஞ்சம் நெய் சேர்த்து சூடு தண்ணீர் விட்டு பிசையுங்க. இதை சப்பாத்தி உருண்டை போல உருட்டி, உருண்டையை உள்ளங்கையிலோ அல்லது சுத்தமான பாலிதீன் பேப்பரிலோ வைச்சு தட்டி அதன் நடுவே பூரணத்தை ஒரு ஸ்பூன் வைத்து நன்றாக உருட்ட வேண்டும். இதை நெய் தடவிய இட்லி தட்டில் வைத்து அவித்தால் சூடான, சுவையான விநாயகருக்கு பிடித்த மோதகம் ரெடி.
காரக்கொழுக்கட்டை
தேவையானவை:
பச்சரிசி மாவு- அரை கிலோ.
கடலைப்பருப்பு- 100 கிராம்.
வெள்ளை உளுத்தம்பருப்பு- சிறிதளவு.
தேங்காய்-1,
மிளகாய் வத்தல்
- 10,
நெய்- சிறிதளவு,
உப்பு- தேவையான அளவு.
செய்முறை: பச்சரிசி மாவை தேவையான அளவுவெந்நீர், நெய், உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் நெய் ஊற்றி கடலைப்பருப்பு, உளுத்தம்
பருப்பு, பல் பல்லாக நறுக்கிய தேங்காய் (துருவியும் சேர்க்கலாம்) ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.
தாளிக்கும்போதே மிளகாய் வத்தலை பிய்த்து போடவும். பின்பு பிசைந்த மாவையும் அதில் போட்டு நன்றாக கிளறவும். இந்த கலவையை சிறு சிறு உருண்டையாகவோ அல்லது கையால் பிடித்து வைத்தோ எந்த உருவத்தில் வேண்டுமோ அதன்படி செய்து இட்லி தட்டில் வைத்து அவிக்கவும். சுவையான காரக்கொழுக்கட்டை தயார்.
பால்கொழுக்கட்டை
தேவையானவை:
பச்சரிசி மாவு- கால் கிலோ
சர்க்கரை- 400 கிராம்
தேங்காய்- 1
நெய்- 50 கிராம்
பால்- 250 மி.லி.,
ஏலக்காய்- 5
கிராம்பு- 2
சுக்கு- சிறிதளவு
உப்பு- சிறிதளவு.
செய்முறை: தேங்காயை அரை மூடி துருவலாகவும் அரை மூடி பாலாகவும் எடுத்துக் கொள்ளவும்.
பச்சரிசி மாவில் நெய், தேங்காய் துருவல், இரண்டு சிட்டிகை உப்பு போட்டு பிசையவும். இந்த கலவையை சீடை உருண்டைகளைப் போல பிடித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 250 மி.லி., தண்ணீர் நன்றாக கொதித்ததும் உருண்டைகளை அதில் போடவும். ஐந்து நிமிடம் கழிந்ததும் சர்க்கரையை அதில் சேர்க்கவும். இரண்டு நிமிடம் கழித்து தேங்காய்ப்பால், ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, கிராம்பு பொடி, பால் ஆகியவற்றை அவித்து வைத்த உருண்டைகளுடன் சேர்க்கவும். பிறகென்ன, விநாயகருக்கு படைச்சிட்டு சாப்பிட
வேண்டியது தான். இளஞ்சூடாக இதை சாப்பிட்டால் டேஸ்ட்டா இருக்கும்.