கேளுங்க சொல்கிறோம் - வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
கேளுங்க சொல்கிறோம் - வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாரியார்.
ADDED : நவ 19, 2010 03:25 PM

** பெருமாள் கோயிலில் தீர்த்த பிரசாதம் தருவதன் நோக்கம் என்ன? மா. பாலசுந்தரம், மதுரை.
எந்தக் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தாலும் அந்த சுவாமிக்குரிய பிரசாதத்தை வழங்குவது மரபு. இதன் மூலம் இறையருளுககுப் பாத்திரமாகிறோம். சிவன் சன்னதியில் விபூதியும், அம்பாள் சன்னதியில் குங்குமமும், பெருமாள் சன்னதியில் தீர்த்தம், துளசி பிரசாதமும் வழங்குவர். இத்துளசியும், தீர்த்தமும் உடல் ஆரோக்கியத்தை நல்கும் அருமருந்தாக இருப்பதோடு செல்வவளத்தையும், முகப்பொலிவையும் நமக்குத் தருகின்றன.
* நந்தியின் ஒரு காதை மூடிக்கொண்டு மற்றொரு காதில் கோரிக்கையைக் கூறுகிறார்களே. இது சரியா? அ.சு. கிருஷ்ணன், புதுச்சேரி.
இது எப்படி பழக்கத்திற்கு வந்தது என்றே புரியவில்லை. ஒருவேளை நந்திக்குக் காது செவிடு என்று கிளம்பி விட்டார்களோ என்னவோ? பாவங்கள் இரண்டு விதம். ஒன்று செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பது. மற்றொன்று செய்யக் கூடாததைச் செய்வது. இதில், இரண்டாவது தான் மிகப்பெரிய பாவம் என்கிறது தர்மசாஸ்திரம். நந்தி காதில் பிரார்த்தனையைச் சொல்லவே கூடாது. விக்ரகங்களைத் தொட்டு பேசுவதை அறவே தவிர்க்க
வேண்டும். பிரதோஷத்தன்று நந்தி படும்பாடு மிகப்பாவமாகத் தான் இருக்கிறது.
* கோயில் கருவறையில் தீபம் மட்டும் தான் எரி கிறது. மின்சார வெளிச்சம் இருப்பதில்லையே ஏன்? அ. முருகானந்தம், மதுரை.
விளக்கில் எண்ணெய் ஊற்றி திரியோடு தீபம் ஏற்றுவது என்பது எவ்வளவோ தத்துவங்களை உள்ளடக்கியது. திரி எரிந்து தீபம் பிரகாசிக்கிறது. நம்மிடத்தில் உள்ள தீய குணங்களும், பாவங்களும் விலகி நல்லறிவும், புண்ணியமும் வெளிப்படவேண்டும் என்பது தான் தீபத்தத்துவமாகும். ''தீபஸ்ஸத் விஷயா:'' என ஆகமம் கூறுகிறது. மின்சார விளக்கு ஒளியில் பார்ப்பதை விட தீபஒளியில் சுவாமியைத் தரிசிப்பதே ஆனந்தம் . சாஸ்திரம் தோன்றிய காலத்தில் மின்சாரம் கிடையாது. எனவே, அதைப் பற்றி சாஸ்திரங்களில் இல்லை. அவ்வளவே. கருவறையில் மின்சாரம் பயன்படுத்தலாமா, கூடாதா என்று விவாதங்களில் ஈடுபட வேண்டாமே!
* வீட்டில் சூரியபகவான் படம் வைத்து வழிபடலாமா? எஸ். சங்கர் குமார், கோயம்புத்தூர்
எல்லா சுவாமி படங்களும் தான் விற்பனைக்கு வந்து விட்டதே! சூரியன் மட்டும் விதிவிலக்கா என்ன? தாராளமாக வைத்து வழிபடுங்கள். ஆதித்தன் அருளால் வீட்டில் அனைவரும் ஆரோக்கியமும், ஆத்மபலமும் பெற்று மகிழுங்கள்.
* வில்வ மரத்தை வீட்டின் முன்புறம்வைக்காமல் பின் புறம் மட்டும் தான் வைக்க வேண்டும்என்கிறார்களே ஏன்? த. எலிசபெத் ராணி, குன்றத்தூர்
வில்வம் சிவபெருமானுக்கு உகந்ததாகும். வில்வமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக வேதம் கூறுகிறது. தூய்மையான இடத்தில் துளசி மாடம் வைத்துப் பூஜிப்பது போல வில்வமரத்தையும் வழிபட வேண்டும். வீட்டில் முன்புறத்தில் வில்வமரத்தை வைத்திருப்பது சுபபலனைத் தரும். தாராளமாக வீட்டின் முன் வைக்கலாம்.
* சம்பந்தரின் கோளறு பதிகம் பாடுவதால் கிடைக்கும் பலன் என்ன? ந. வசந்தகுமார், சென்னை
கோளறு பதிகம் என்றால் நவக்கிரகங்களின் கெடுதல்களை நீக்கும் பத்து பாடல்கள் என்பது பொருளாகும். இதனைப் பாடி சிவபெருமானை வழிபட்டால் நவகிரக தோஷம் நீங்கும். தீயசக்திகள் நம்மை அண்டாது. நாம் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். ஞானசம்பந்தரின் இப்பதிகம் பாடி சிவபெருமானை வணங்குபவர்கள் சொர்க்கலோகத்தில் அரசபதவி பெறுவர் என்பதை, ''தான்உறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே!'' என்று பாடியுள்ளார்.