
வாசகர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாதசிவாச்சாõரியார்.
*ருத்ராட்ச மாலை உடம்பில் படும்படி அணிய வேண்டுமா அல்லது ஆடைக்கு மேல் அணிவது முறையா?கே.அப்பாசாமி, திருப்பூர்
ருத்ராட்சம் சமயச் சின்னம் மட்டுமல்ல. ஏராளமான மருத்துவ குணமும் வாய்ந்தது. உடம்பில் படும்படி தான் அணிய வேண்டும். ரத்த அழுத்த நோய் குறைய ருத்ராட்சம் உடம்பில் படும்படி அணிவது சிறந்தது. ஆன்மிக ரீதியாகவும் இப்படி அணிவது தான் முறை.
* குல தெய்வ வழிபாடு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? கோ.ருக்மணி, கள்ளக்குறிச்சி
'குலம்' என்றால் 'குடும்ப பாரம்பரியம்' என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோள். குழந்தைகளுக்கு முடி எடுப்பது, காது குத்துவது, திருமணப் பட்டுப்புடவை, திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்துக் குலதெய்வ பூஜை செய்வது எல்லாமே நம் குலம் தழைக்கச் செய்யப்படுவதாகும்.
* ''சமாராதனை'' எனும் சொல்லிற்கு விளக்கம் அளிக்கவும்? ராஜ முருகையன், புதுச்சேரி
அற நெறியில் நிற்பவர்கள் வேதம், பயின்றவர்கள், நமக்கு நல்லறம் போதித்தவர்கள். இவர்களையெல்லாம் தெய்வமாக எண்ணி பூஜிக்க வேண்டும். ஆராதனை என்றால் பூஜை. ஸம்+ ஆராதனை= ஸமாராதனை. ''ஸம்'' என்றால் 'சிறந்த முறையில்' என்று பொருள். முன்கூறிய பெரியவர்கள் நம் வீட்டிற்கு வரும் போதோ அல்லது நாம் அவர்களை அழைத்தோ சமாராதனை செய்ய வேண்டும். அவர்களின் பாதங்களைக் கழுவி சந்தனம், குங்குமம் இட்டு மலர்களினால் திருவடிகளில் அர்ச்சனை செய்து சிறந்த முறையில் உணவு அளிப்பதே சமாராதனையாகும். இதனை அடியவர்களுக்கு அன்னம் பாலித்தல், மாகேஸ்வர பூஜை என்றெல்லாம் கூட அழைப்பார்கள். திருநீலநக்கர், சிறுத்தொண்டர் போன்ற நாயன்மார்கள் அடியவர்களுக்கு
அன்னம் பாலிப்பதையே தமது ஆயுட்பணியாகக் கொண்டிருந்தார்கள்.
* வீட்டில் பகல், இரவு பார்க்காமல் எந்நேரமும் பஞ்சாங்கம் ஜோதிடம் தொழிலாகச் செய்வது சரியா? எம்.மணி, பொள்ளாச்சி
சூரியன் அஸ்தமனமான பிறகு பஞ்சாங்கம் ஜோதிடம் பார்க்கமாட்டார்கள். நவக் கிரங்களுக்குத் தலைவன் சூரியன். அவன் மறைந்துவிட்டால் கிரகங்கள் அனைத்திற்குமே பலம் கிடையாது. எனவே இரவில் ஜோதிடம் சொன்னால் பலிக்காது என்பார்கள். இரவில் ஜோதிடம் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது.
** சனிபகவானை நேரில் நின்று வழிபடலாமா?பவித்ரா, மதுரை
எந்த சுவாமியையுமே நேரில் நின்று தரிசிக்கக்கூடாது. இறைஅருள் என்பது கடைக்கண் பார்வையினால் கிடைப்பது. இறைவன் தீயவர்களை மட்டுமே நேரில் பார்த்து சுட்டெரிக்கிறார். நாம் நல்லவர்கள் தானே. ஒரு புறமாக நின்று கடைக்கண் பார்வை பெற்று நலம் பெறுவோமே.
* கடவுளுக்குக் கூட திருஷ்டி உண்டா? கணேசன், மும்பை
கிடையாது. எனினும் பெரிய அளவில் அலங்காரம் தீபாராதனை போன்றவைசெய்யப்படும் போது விபூதியினால் திருஷ்டி சுற்றி சூடத்தின் மீது போடுவார்கள். எதற்காக என்றால், இவ்வளவு பெரிய பூஜையைச் செய்கிறார்களே என்று நமக்கு திருஷ்டி தோஷம் ஏற்படாமலிருப்பதற்காகத்தான்
* ஒரே வயதுடைய ஆணும், பெண்ணும் திருமணம் செய்வது சரியா? தவறா? சாஸ்திர ரீதியாக விளக்கம் கூறவும்? எஸ். மைதிலி, சென்னை
சில செயல்களைச் செய்தால் ஆயுள் குறையும் என 'நீதி சாஸ்திரம் கூறுகிறது' காலை வெயிலில் குளிர்காய்வது, பிணம் எரிக்கும் புகையை சுவாசிப்பது, ஒரு ஆண் தன்னைவிட மூத்தவளை மணப்பது, சுத்தமில்லாத நீரைப்பருகுவது, இரவில் தயிர்சாதம் சாப்பிடுவது என்ற இவ்வைந்தும் ஆயுளைக் குறைக்கும். தங்கள் கேள்விப்படி ஒரே வயது என்றால், நாள் கணக்கிலாவது பெண் வயது குறைவாக இருக்க வேண்டும். ஜாதகப் பொருத்தம் கூறும் நூல்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. குறைந்த பட்சம் 18 மாதங்களாவது ஆணை விட பெண் வயது குறைவாக இருக்க வேண்டும் எனக்கூறுகின்ரறன.