ADDED : பிப் 03, 2017 09:57 AM

ரோகிணி நட்சத்திரத்தன்று நாள் நட்சத்திரம் பார்க்காமல் சுபவிஷயம் நடத்தலாமா?
கே.ஏ.நமசிவாயம், பெங்களூரு.
ரோகிணி நட்சத்திர நாளில் தோஷம் எதுவும் பார்க்க வேண்டாம் என்பர். இதைத் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சுபநிகழ்ச்சி நடத்த, நமது நட்சத்திரத்திற்குப் பொருந்தா விட்டாலும், ரோகிணி நட்சத்திரத்துடன் நல்ல திதி, கிழமை, யோகம் போன்றவை கூடியிருந்தால் பரவாயில்லை என்று ஏற்றுக் கொள்ளலாம். அஷ்டமி, நவமி, கரிநாள் போன்றவற்றில் ரோகிணி அமைந்தால் நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
திருமணத்தேதி நிச்சயித்த பின் முன்னோருக்கு சிராத்தம் நடத்தலாமா?
ஆர்.மீனாட்சி, கோவை.
மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் சிராத்தம் செய்வது கூடாது.
* எங்கள் குடும்பத்திற்கு குலதெய்வம் எது என்று தெரியவில்லை. யாரை வழிபடலாம்?
டி.பரிபூரணம், வில்லிவாக்கம்.
ஜாதகம் பார்த்து அதன் மூலம் அறிந்து கொள்ளலாம். மூதாதையர்கள் எந்த தெய்வத்தை வழிபட்டார்கள் என்பதை உறவினர்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அல்லது குடும்பத்தார் எல்லோரும் ஒன்று கூடி அவரவர்களுக்கு இஷ்டமான தெய்வத்தின் பெயர்களை சீட்டுகளில் எழுதி குழந்தையிடம் எடுக்கச் செய்து, அதில் வரும் தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபடலாம்.
அறுபதாம் கல்யாணத்தை அனைவரும் கோவிலில் நடத்துக்கிறார்கள் இதை வீட்டிலேயே செய்யலாமா?
எஸ். எழில்வேந்தன், திட்டக்குடி.
கோவிலில்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிலேயே நடத்திக் கொள்ளலாம்.
** அன்பளிப்பாக வந்த சுவாமி படத்தை மற்றவர்களுக்கு பரிசாகக் கொடுக்கலாமா?
சி.கார்த்திகேயன், சாத்தூர்.
இது ஒரு தர்ம சங்கடமான விஷயம். அன்பளிப்பாக வருவதை வாங்க மறுப்பதிலும் கஷ்டம். நமக்கு வந்த தெய்வ படத்தைப் பிறருக்கு கொடுப்பது சரிதானா என யோசிக்க வேண்டியதும் அவசியம். அளவுக்கதிகமான படங்களை வீட்டில் வைத்து பூஜை செய்வதும் சிரமம். இவ்வளவு விஷயங்களையும் பரிசாக சுவாமி படங்களை வழங்குவோர் யோசித்தால் தான், இப்பிரச்னைக்கு தீர்வு உண்டாகும். இருப்பினும் இதைப் பிறருக்கு வழங்குவதில் தவறு ஒன்றும் இல்லை.
மறைவுக்குப் பின் எனக்கு தர்ப்பணம் செய்ய யாருமில்லை. எனவே இப்போதே எனக்கு நானே தர்ப்பணம் செய்து கொள்ளலாமா? அதற்கு எங்கு செல்ல வேண்டும்?
டி.கே.சுவாமி, ஊர்பெயர் இல்லை.
பெற்ற பிள்ளைகள் இல்லாவிட்டாலும் சகோதர வகையில் பிள்ளைகள் இருந்தால் அவர்களைக் கொண்டு செய்யும்படி அறிவுறுத்தலாம். ஒருவருமே இல்லாத பட்சத்தில் தமக்கு தாமே இறுதிச் சடங்குகளை காசி முதலான புண்ணிய தலங்களில் செய்து கொள்ளலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
