ADDED : ஆக 18, 2017 10:11 AM

* தல விருட்சத்தை கைகளால் தொட்டு வணங்கலாமா?
வி.கன்னிகா, புதுச்சேரி
கோயிலில் உள்ள விக்ரகங்கள், வாகனங்கள், தலவிருட்சம் எல்லாவற்றையும் வழிபடலாமே தவிர எதையும் கைகளால் தொட்டு வணங்க கூடாது.
பூஜை நடத்தும் சொம்பு, குடத்தில் நூல் சுற்றுவது ஏன்?
எஸ்.மாரிமுத்து, சிட்லபாக்கம்.
பூஜை செய்யப்படும் சொம்பு அல்லது குடத்தை தெய்வத்தின் திருமேனியாக (உடல்) பாவிக்க வேண்டும்.அதன் அடிப்படையில் உடம்பிலுள்ள நரம்பாக கருதப்பட்டு, நூல் சுற்றப்படுகிறது.
கோயில் குளத்தில் ஒரு கைப்பிடி மண் எடுத்து எறிந்த பின்னர் குளிக்க வேண்டும்
என்கிறார்களே... உண்மையா?
எஸ்.உஷாகுமாரி, அம்பத்தூர்
அப்படி எதுவும் இருப்பதாக தெரியவில்லை!
* மூலவருக்கு விளக்கேற்றினால் போதுமா அல்லது எல்லா சன்னதியிலும் ஏற்றணுமா?
ஜி.மாலதி, புதுப்பெருங்களத்தூர்
மூலவருக்கு மட்டும் விளக்கேற்றினால் போதும். வேண்டுதல், பரிகாரம் செய்பவர்கள் மற்ற சன்னதிகளில் ஏற்றலாம்.
காசிக்குச் சென்றால், ராமேஸ்வரம் செல்ல வேண்டியது கட்டாயமா...
டி.அருணகிரி, மதுரை
ஒன்றுபட்ட பாரதம் தான் ஆன்மிக யாத்திரையின் நோக்கம். மதம், இனம், மொழியை கடந்து மனிதநேயத்தை வளர்க்கவே நாம் யாத்திரை செல்கிறோம். தென் மாநிலத்தவர் நிறைவாக ராமேஸ்வரத்திற்கும், வடமாநிலத்தவர் நிறைவாக காசிக்கும் செல்ல வேண்டும்.
எள்ளை இலவசமாக கொடுக்க கூடாதா...
பி.பழனியம்மாள், மடத்துக்குளம்.
முன்னோர் வழிபாடு, சனிபகவான் பரிகார பூஜைக்கு உரிய எள்ளை தானம் அளிப்பது நல்லது. எள்ளை வாங்குவது தான் கூடாது. தானம் பெறுபவர் தோஷம் நீங்க மந்திரங்களை ஜபிப்பது அவசியம்.
குழலூதும் கிருஷ்ணர், நடராஜர் படங்களை வீட்டில் வழிபடக் கூடாதாமே....
எஸ்.ராஜலட்சுமி, சூலூர்
அப்படி சொல்வது பாவம். மனதிற்குப் பிடித்த தெய்வ விக்ரகங்கள், படங்களை வீட்டில் வழிபடலாம்.
குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடத்திய பின், வேறு பெயர் வைக்கலாமா?
ஆர்.எம்.தக் ஷா, ராமநாதபுரம்
இறைவன் சாட்சியாக, பெரியோர் முன்னிலையில் பெயரிட்ட பின் மாற்ற வேண்டியதில்லை. வேறு பெயர் வைக்க நேர்ந்தால் சுவாமி சன்னதியில் முதலில் வைத்த பெயருடன் வேறு பெயரை புனைப்பெயர் போல சேர்த்து கொள்ளலாம்.
