ADDED : ஆக 10, 2018 08:12 AM

* சத்தியத்தை மீறினால் என்னாகும்?
கா.சஞ்சய்ராஜ், கடலுார்
தெரிந்தே தப்பு செய்தால் பரிகாரம் கிடையாது. பொய் சத்தியம் செய்வது பெரும்பாவம். இதற்கான தண்டனையில் இருந்து தப்ப கடவுளைச் சரணடைவதே வழி.
* சாப்பிடும் முன் உணவை பரிசேஷனம் (நீரால் சுத்தி செய்தல்) கட்டாயமா?
கே.ராஜகோபாலன் சென்னை
உணவை நீரால் மூன்றுமுறை சுத்தி செய்த பின் சாப்பிடுவது நல்லது. ஆனால் சுவாமிக்கு படைத்த பிரசாதத்திற்கு இது தேவையில்லை.
பவுர்ணமி தவிர்த்த மற்ற நாட்களில் மலையைச் சுற்றலாமா?
ஏ.துர்கா, பெங்களூரு
மலை வடிவாக கடவுள் இருக்கிறார் என்ற அடிப்படையில் மலையைச் சுற்றி வழிபடுகிறோம். எல்லா நாளும் கிரிவலம் வரலாம்.
பிரணவ மந்திரம் 'ஓம்' என்பதன் சிறப்பு என்ன?
கே.நிரஞ்சனா, திருப்பூர்
எல்லா மொழிக்கும் முன்னே தோன்றியது வேதம். சொல், எழுத்துக்கு அப்பாற்பட்டு ஒலி வடிவில் வேதத்தை வெளிப்படுத்திய இறைவன் முதலில் உச்சரித்த ஒலி நாதமே பிரணவம் என்னும் 'ஓம்'. எந்த கடவுளுக்குரிய மூல மந்திரத்தையும்,' ஓம்' என்று சொல்லியே தொடங்குவர். பிராணயாமப் பயிற்சியின் போது இதை உச்சரித்தால் நோய் நீங்கும்.
பிறப்பிலேயே குணம் உண்டாகிறதா? தீயவனால் திருந்த முடியுமா?
ஆர்.முகுந்தன், புவனகிரி
குணம் என்பது பிறப்புடன் சம்பந்தப்பட்டது. நல்லது, கெட்டது அறியாத குழந்தைக்கும் இது பொருந்தும். குழந்தையை நல்ல மனிதனாக உருவாக்கும் பொறுப்பு பெற்றோர், ஆசிரியரைச் சேர்ந்தது. விதிவசத்தால் சிலர் தீயவர்களாக மாறுகின்றனர். நல்லோர் நட்பு, உற்றார், உறவினர் பிரார்த்தனையால் திருந்த வாய்ப்புண்டு.
திருவிழாவில் சுவாமிக்கு குடை, தீவட்டி என பிடிப்பது ஏன்?
எஸ்.தேவசேனாபதி, காஞ்சிபுரம்
சுவாமி புறப்படும் போது மன்னருக்குரிய மரியாதை செய்ய வேண்டும். இதை 'ராஜ உபசாரம்' என்பர். குடை, தீவட்டி, மேளம், பக்தர்களின் வாழ்த்து ஒலியுடன் சுவாமி வீதி வலம் வருவார். அவரின் மங்களகரமான பார்வையால் ஊர் மக்களுக்கு நன்மை உண்டாகும்.
