ADDED : ஜூன் 27, 2019 10:29 AM

பாதுகாப்பான பயணத்திற்கு யாரை வழிபடலாம்?
எஸ்.தங்கவேலு, மதுரை
மாலை 6:00 மணிக்குப் பிறகு சாலைப்பயணத்தை தவிர்ப்பது நல்லது. புறப்படும் முன் குலதெய்வம், துர்கை, சரபேஸ்வரர், நரசிம்மர் போன்ற தெய்வங்களை வழிபடலாம்.
* மூலவரை தரிசிக்க முடியாத நிலையில் கோபுரத்தை வணங்கலாமா?
பி.சரவணன், ஆலந்துார்
சன்னதியில் திரையிட்டிருந் தாலோ அல்லது கதவு சாத்தியிருந்தாலோ, பொறுமையுடன் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்யுங்கள். முடியாத நிலை ஏற்பட்டால் கோபுரத்தை வணங்குங்கள்.
செவ்வாய் தோஷத்துக்கு எளிய பரிகாரம் இருக்கிறதா?
ஆ.கண்ணதாசன், வளசரவாக்கம்.
செவ்வாய்க்கிழமையில் காலை 6.00 - 7.00 மணிக்குள், செவ்வாய் ஹோரையில் முருகனுக்கு சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
கேதுவுக்குரிய ஸ்லோகம் ஒன்றை சொல்லுங்கள்.
டி.அஸ்மிதா, கோவை
''பலாஸ புஷ்ப சங்காஸம்
தாரகா கிரக மஸ்தகம்
ரெளத்ம் ரெளத்ராத்மகம் கோரம்
தம் கேதும் பிரணமாம் யஹம்''
பொருள்: புரசம்பூவினைப் போல சிவந்த நிறம் கொண்டவரே! நட்சத்திரம், கிரகங்களில் தலைமையானவரே! கோபம் மிக்கவரே! கேது பகவானே! உம்மை வணங்குகிறேன். குளித்த பிறகு, இந்த ஸ்லோகத்தை சொன்னால் தீய சிந்தனை மறையும். அறிவு வளரும். நோய் தீரும். மோட்சம் கிடைக்கும்.
* விளக்கேற்றும் போது கதவு திறந்திருக்க வேண்டுமா?
த.சங்கீதலட்சுமி, வடுகப்பட்டி
ஆம். விளக்கேற்றும் நேரத்தில் மகாலட்சுமி நம் வீடு தேடி வருகிறாள். இந்த நேரத்தில் முன்வாசல் கதவை திறக்க வேண்டும். கொல்லை வாசல் கதவை சாத்த வேண்டும்.
மகான்களின் சமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்வது ஏன்?
ஜி.சவுமியா, பெங்களூரு
மகான்களின் சமாதி இருக்குமிடம் புனிதம் மிக்கது. அதன் அடையாளமாக விநாயகர் அல்லது சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபடுவர். வியாழக்கிழமையில் இங்கே வழிபட்டால் குருவருள், திருவருள் சேரும்.