
* பெற்றோரை புறக்கணிக்கும் பிள்ளைகளை எப்படி திருத்தலாம்?
எஸ்.ஸ்ரேயா, திருத்தணி
உங்கள் குழந்தையின் சிறுவயதில், நீங்கள் அவர்களிடம் அன்பாக, ஆதரவாக இல்லாததே புறக்கணிப்புக்கு காரணம். தாத்தா, பாட்டிகளைப் புறக்கணிக்கும் குடும்பத்திலுள்ள குழந்தைகள், பெரியவர்களானதும் பெற்றோரை நிச்சயம் புறக்கணிப்பர். குழந்தைகளிடம் நண்பரை போல பழகினால் புறக்கணிப்புக்கு ஏது இடம்?
விரிசலான சிலை, உடைந்த படம் வீட்டில் இருக்கலாமா?
ஆர். கேஷிகா, திண்டிவனம்
கிழிந்த ஆடைகளை உடுத்த விரும்புவார்களா? இல்லையே! சிதைந்த சிலைகள், உடைந்த படங்களுக்கு பூஜை செய்வது கூடாது. சரி செய்த பின்னர் வழிபடலாம். இல்லாவிட்டால் புதிதாக வாங்குவது நல்லது.
சிலர் 'என்னை சீக்கிரம் அழைத்துக் கொள்' என கடவுளிடம் வேண்டுகிறார்களே...
கே.சம்யுக்தா, சென்னை
மனப்பக்குவம் உள்ளவர்கள், ''இறைவா! போதும் என்னை அழைத்துக் கொள்' என வேண்டுவர். அன்புக்கு ஏங்கும் பெற்றோர், வறுமை, கடனால் சிரமப்படுவோரும் இப்படி சொல்வதுண்டு. ஆனால் அவரவர் கர்மக்கணக்கு தீரும் வரை வாழ்ந்தே ஆக வேண்டும். உயிரைப் பறிப்பது எமதர்மன், சித்ரகுப்தருக்குரிய வேலை. அதில் கடவுள் தலையிட மாட்டார்.
* பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?
சி. விகாஷ், மதுரை
கூடாது. நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றை கோயில் நந்தவனத்தில் பராமரிக்க, பண உதவி செய்யுங்கள். முடிந்தால் அடிக்கடி அதற்கு தண்ணீர் ஊற்றுங்கள்.
* புதுமனை புகுவிழா அன்று ஹோமம் செய்வது அவசியமா?
எஸ். ஷைனிகா, கோவை
கிரகப் பிரவேசத்தன்றே ஹோமம் நடத்துவது நல்லது.
* பிறந்த நட்சத்திரத்தன்று அர்ச்சனை செய்தால் நல்லதாமே...
சி.தர்ஷிக், புதுச்சேரி
நட்சத்திரத்தின் முக்கியத்துவம் கருதியே, கோயிலில் சங்கல்பம் செய்யும் போதும், திருமண பொருத்தம் பார்க்கும்போதும் பிறந்த நட்சத்திரம் கேட்கப்படுகிறது. எனவே நட்சத்திரம் வரும் நாளில் அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.