ADDED : டிச 13, 2019 09:43 AM

* திருமணத்தில் மாப்பிள்ளைக்கு மெட்டி அணிவிப்பது ஏன்?
சி.ஜெயத்ரதன், தேனி
பெண்ணுக்கு தாலி எப்படி அவசியமோ, அது போல ஆண்களுக்கு மெட்டி அணிவிக்கும் பழக்கம் அந்த காலத்தில் இருந்து வந்தது. தற்போது சில குடும்பங்களில் மட்டும் உள்ளது.
* வீட்டில் எள் தீபம் ஏற்றலாமா?
எஸ்.பி.ஹரிணி, புதுச்சேரி
ஏற்றக் கூடாது. எள்தீபம் ஏற்றினால் ஏழரை, அஷ்டமத்துச்சனி தோஷம் நீங்கும். ஆயுள் பலம், தொழிலில் வெற்றி கிடைக்கும் சனீஸ்வரர் சன்னிதியில் எள்தீபம் ஏற்றலாம்.
கும்பாபிஷேகத்தின் போது வானில் கருடன் வட்டமிடுவது அவசியமா?
கே.பார்கவி, மதுரை
கருடன் வட்டமிடுவது என்பது இயற்கையான ஒன்று. கும்பாபிஷேகத்தின் போது கருடன் வட்டமிட்டால் தான் நல்லது என்ற எண்ணத்தை உருவாக்கி விட்டனர். இப்போதோ காக்கை, குருவிகள் கூட கண்ணில் தெரிவதில்லை.
* கல் சிலைகளை விட மரகத சிலைக்கு சக்தி அதிகமா?
டி.தாஸ்விகா, பள்ளிக்கரணை
ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. கருங்கல், ஸ்படிகம், மரகதம், கோமேதகம் என வரிசை கிரமமாக ஒன்றை விட ஒன்றுக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதற்காக எதையும் குறைவாக கருத வேண்டாம். அர்ச்சனை, தொடர்ந்து மந்திரத்தை ஜபிக்க சிலையின் சக்தி அதிகரிக்கும்.
* காயத்ரி மந்திரம் காயத்ரிஜபம் இரண்டும் ஒன்றா?
கே.ஆர்.சாய் சந்தோஷ், கோவை
வேதமாதாவான காயத்ரி தேவிக்குரியது காயத்ரி மந்திரம்.
ஓம் பூர் புவ ஸ்வ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
த்யோ யோந: பிரசோதயாத்
இந்த மந்திரத்தை தினமும் மாலையில் 24,48,108 என்ற எண்ணிக்கையில் சொல்வதை காயத்ரி ஜபம் என்பர்.
சந்திர தரிசனம் எந்த நாளில் செய்ய வேண்டும்?
ஆர்.தேஜாஸ்ரீ, பண்ருட்டி
அமாவாசையில் இருந்து மூன்றாம் நாள் இரவில் நிலாவைப் பார்ப்பது சந்திர தரிசனம். (உம். திங்கள் அமாவாசை என்றால் புதன் சந்திர தரிசனம்) இதற்கு 'திதிக் கணக்கீடு' என்று பெயர். சந்திர தரிசனத்தால் செல்வம் பெருகும். மனபலம் அதிகரிக்கும்.