ADDED : பிப் 28, 2020 01:00 PM

காலையில் விழித்ததும் உள்ளங்கைகளைப் பார்ப்பது ஏன்?
ஜி. ஹரிணி, சிவகங்கை
உள்ளங்கையின் நுனியில் மகாலட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், கீழே பார்வதியும் இருக்கின்றனர். விழித்ததும், உள்ளங்கைகளைப் பார்ப்பதால் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கும். மகிழ்ச்சி, நல்ல புத்தி, மனவலிமை, செல்வ வளம் சேரும்.
* மன்னிக்கும் பக்குவத்தை அடைவது எப்படி?
எஸ். தீபன், புதுச்சேரி
இன்பமும், துன்பமும் அவரவர் முற்பிறவியின் செயலைப் பொறுத்தே உண்டாகிறது. நன்மையோ, தீமையோ எதைச் செய்தாலும் அதற்கு காரணமாக இருப்பவர்கள் வெறும் கருவி மட்டுமே. இதை உணர்ந்தால் 'எல்லாம் கடவுளின் செயல்' என்ற எண்ணம் ஏற்படும். அந்நிலையில் மன்னிக்கும் பக்குவம் கிடைக்கும்.
* பிரதோஷ வழிபாட்டில் சிவபெருமானை நந்தியின் கொம்புக்கு நடுவில் தரிசிப்பது ஏன்?
ஜி. மித்ரா, சென்னை
அனைத்து உயிர்களும் இன்பமாக வாழ வேண்டும் என்பதற்காக, பிரதோஷத்தன்று (மாலை 4:30 - 6:00 மணிக்குள்) சிவன் நந்தியின் கொம்புக்கு நடுவில் ஆனந்த தாண்டவமாடுகிறார். இதை தரிசித்தால். அமைதி, நிம்மதி ஏற்படும்.
*சில கோயில்களை மூர்த்தி, தலம், தீர்த்தத்தால் சிறப்புடையது என்பது ஏன்?
ஆர். விஷாலினி, கோவை
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மூன்றாலும் விசஷேமாக அமைந்த கோயில்கள் 'மகா க்ஷேத்திரம்' எனப்படும். மூர்த்தி - சுவாமி, தலம் - தலவிருட்சம். தீர்த்தம் - அக்கோயிலின் குளம். எடுத்துக்காட்டாக மதுரையில் மூர்த்தி - மீனாட்சி சுந்தரஸே்வரர், தலவிருட்சம் - கடம்ப மரம், தீர்த்தம் - பொற்றாமரைக்குளம் மூன்றும் சிறப்புடன் திகழ்கின்றன.
தீயவர்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் வாழ, நல்லவர்கள் துன்பப்படுவது ஏன்?
பி. நரேன், கடலுார்
தீயவரின் மகிழ்ச்சி நீர்க்குமிழி போன்றது. நல்லவரின் துன்பம் தற்காலிகமானது. ஆனால் முடிவில் கிடைக்கும் மகிழ்ச்சி நிரந்தரமானது. அதுவரை கடவுளை பிரார்த்திப்பது நல்லது.
* சத்சங்கம் என்பதன் பொருள் என்ன?
வி. ராம், சிவகாசி
சத் என்ற சொல்லிற்கு உண்மை, நிலையான அறிவு, நல்லது என பொருள். இப்பண்புகள் கொண்ட சான்றோர்கள் கூடியிருக்கும் இடமே சத்சங்கம்.
மனதில் உண்டாகும் வன்மத்தைப் போக்க பரிகாரம் உண்டா?
என். அனன்யா, பொள்ளாச்சி
பேராசை, கோபத்தால் தான் வன்மம் உண்டாகிறது. இவற்றை போக்குவதே பரிகாரம்.