ADDED : மார் 12, 2020 02:34 PM

ஆண்டுதோறும் கோயிலில் திருக்கல்யாணம் நடத்துவது ஏன்?
கே.சஷ்டிக், திருத்தணி
நித்ய கல்யாண சுந்தரராக கடவுள் இருப்பதால் ஆண்டு தோறும் திருக்கல்யாணம் நடத்துகிறோம். 'இல்லறம்' என்னும் குடும்ப வாழ்வில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் அனைவரும் வாழ வேண்டும் என்பதே திருக் கல்யாணத்தின் நோக்கம்.
* வீட்டில் கற்றாழை வளர்த்தால் திருஷ்டி நீங்குமா?
எல்.ஆகாஷ், சிவகங்கை
திருஷ்டி அகல கற்றாழையை வாசலில் கட்டினால் போதும். மருத்துவ குணங்கள் பல இதில் இருக்கின்றன.
* ஆண்களுக்கான விரதங்கள் என்னென்ன?
எல்.கிஷோர், கோவை
விநாயகர் - சங்கடஹர சதுர்த்தி
முருகன் - சஷ்டி,
சிவன் - பிரதோஷம்,
அம்பிகை - செவ்வாய், வெள்ளிக்கிழமை விரதம்
மகாவிஷ்ணு - ஏகாதசி
என அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு உரிய விரதங்களை ஆண்கள் மேற்கொள்ளலாம். இரு பாலருக்கும் இவை பொதுவானதே.
* கோயிலில் எறும்பு புற்றில் அரிசிமாவு இடுவது ஏன்?
பி.கல்யாணி, சென்னை
''எறும்பு தின்ன கண் தெரியும்'' என்பது பழமொழி. எறும்புக்கு உணவிட்டால் வாழ்நாள் முழுவதும் பார்வை குறைபாடு ஏற்படாது என்பது இதன் பொருள். கோயிலில் உள்ள எறும்பு புற்றில் தான் இட வேண்டும் என்பதில்லை. வீட்டில் மாக்கோலம் இடுவதே எறும்பு தின்பதற்குத் தான்.
* பிளாட் அல்லது வீட்டில் துளசி மாடத்தை எங்கு வைக்கலாம்?
எம்.ரித்திகா, புதுச்சேரி
சூரியஒளிபடும் இடமான வீட்டின் நடுமுற்றம் அல்லது பிளாட்டில் உள்ள பால்கனியில் வைக்கலாம். அந்த இடம் வடகிழக்கு மூலையாக (ஈசானம்) இருந்தால் நல்லது.
கும்பாபிஷேக தீர்த்தம் பக்தர்களின் மீது படுவது கட்டாயமா?
சி.ஸ்வேதா, மதுரை
கும்பாபிஷேகத்தை தரிசித்தபின் தீர்த்தத்தை பருகியும், உடல் மீது தெளித்தும் கொள்ள வேண்டும். யாக சாலையில் வைக்கப்பட்ட தீர்த்தத்தை, கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் அனைவர் மீதும் தெளிப்பது சாத்தியமில்லை. இதை உணர்ந்து வழிபட்டால் தேவையற்ற தள்ளுமுள்ளு, சச்சரவு உண்டாகாது.