
* வீட்டில் எப்போது விளக்கு ஏற்றலாம்?
எம்.சாத்விகா, சென்னை
சூரியன் உதிக்கும், மறையும் நேரத்தை 'சந்தியா காலம்' என்பர். சந்தியா என்பது மகாலட்சுமியைக் குறிக்கும். மகாலட்சுமி அருள் பெற காலை 6:00 - 7:30; மாலை 5:30 - 7:30 மணி வரை விளக்கு ஏற்றுவது நல்லது.
* சில தலங்களில் மட்டும் நவக்கிரகம் ஒரே திசை நோக்கி இருப்பது ஏன்?
பி.தேஜஸ்,கோவை
நவக்கிரங்கள் தங்களுக்கான சாபம் தீர சிவனை வழிபட்ட தலங்கள் திருவாரூர், வைத்தீஸ்வரன் கோவில், குன்றக்குடி. நவக்கிரகங்களுக்கு அருள்பாலித்த சுவாமி இங்கு மூலவராக இருப்பதால் அவரை வழிபட ஒரே திசை நோக்கி உள்ளனர்.
சந்தியா வந்தனம் என்றால் என்ன?
கே.ஆஷிகா, திருத்தணி
சந்தி என்றால் சந்திப்பது என்பது பொருள். இரவும் பகலும் சந்திக்கும் பொழுது காலை சந்தி. காலையும் மதியமும் சந்திக்கும் பொழுது மதிய சந்தி. பகலும், இரவும் சந்திக்கும் பொழுது சாய சந்தி. இந்த காலத்திற்கான அதிதேவதை சந்தியா. இந்த சக்தியை வழிபடுவதே சந்தியா வந்தனம்.
* பிதுர் தோஷம் தீர பரிகாரம் சொல்லுங்கள்
எம்.பிரணவ், மதுரை
அமாவாசை, தமிழ் மாதப்பிறப்பு, புரட்டாசியில் வரும் மகாளய பட்சம் போன்ற புண்ணிய காலங்களில் முடிந்த தர்மத்தை செய்யுங்கள். அமாவாசை தர்ப்பணம், வருட திவசம் செய்ய மறக்க வேண்டாம். பசுவுக்கு அகத்திக்கீரை, பழம் கொடுங்கள்.
தியானம், பாராயணம் கடவுளுக்கு விருப்பமான எது?
டி.அஸ்வதா, பொள்ளாச்சி
அருளாளர்களால் பாடப்பட்ட பாடல்களை வாய்விட்டு சொல்வது பாராயணம். (உ.ம். விநாயகர் அகவல், கந்தசஷ்டி கவசம்)இவற்றை கண்களை மூடி மனதிற்குள் உருவேற்றுவது தியானம். பக்தியுடன் செய்தால் இரண்டும் கடவுளுக்கு விருப்பமானதே.
நான் என்னும் அகந்தையை அழிப்பது எப்படி?
வி.மணீஷ்,விழுப்புரம்
அகந்தை கொண்டவர் சமுதாயத்தால் புறக்கணிக்கப்படுவார். நாயன்மார், ஆழ்வார்களின் வரலாற்றை அடிக்கடி படித்தால் அகந்தை அழியும்.
* எந்தக் கிழமைகளில் துக்கம் விசாரிக்கப் போகக் கூடாது?
ஜி.மித்ரா, கடலுார்
திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துக்கம் விசாரிக்கப் போகக் கூடாது. இந்த நாட்களில் மரணம் நேர்ந்தால் இது பொருந்தாது.
செவ்வாய், வெள்ளியன்று கீரை சாப்பிடக்கூடாதா...?
எல்.முகேஷ், தேனி
சாப்பிடத்தடையில்லை. செவ்வாய், வெள்ளிக்கிழமையில் கீரையுடன் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிடுவர்.